வாழ்வியல் கலை - நேர்மறை சிந்தனைகள்

நேர்மறை சிந்தனைகள்:-  


நேர்மறை சிந்தனைகள் என்பது, மனித வாழ்வில் மிக முக்கிய அம்சமாகும்.  மகிழ்ச்சியான வாழ்வியலில் விரும்பியதை ஈர்ப்பதற்கும், வெற்றிக்கான பாதையை தேர்ந்தெடுப்பதற்கும், இலக்கை நோக்கி நகர்வதற்கும், செல்வத்தை ஈர்ப்பதற்கும் என பல்வேறு நிலைகளுக்கு, நமது  நேர்மறை சிந்தனைகள், நேர்மறை எண்ணங்கள், நேர்மறை வார்த்தைகள் போன்றவை மார்க்கங்களாக அமைகிறது.  நேர்மறை வார்த்தைகள் வெளிப்பட வேண்டும் எனில், நமது சிந்தனைகள்  நேர்மறையாக அமைய வேண்டும். 
     
“நீ எதுவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறாயோ, அதுவாக ஆவாய்” என்ற சுவாமி விவேகனந்தரின் வரிகள்,  இதனை உறுதி செய்கின்றன.

       நேர்மறை எதிர்மறை என இரு வாக்கியங்களைத்தான்  நாம் வாழ்வில் அதிகம் பயன்படுத்துகிறோம்.  நாம் தினம் பயன்படுத்தும் வாக்கியங்களில் பெரும்பாலும் இடம் பெறுபவை, நேர்மறை வாக்கியங்களா? எதிர்மறை வாக்கியங்களா?  எனச்சிந்தித்து, மாற்றம் தேவைப்படின், மாற்ற வேண்டும். நம் எதிர்காலம் பற்றிய பயமும், சூழ்நிலைகளால் ஏற்படும்  தாக்கத்தினால்தான், எண்ணங்கள் எதிர்மறையாக    உருவாக முக்கிய காரணமாகிறது.
   
       நேர்மறை சிந்தனைகள் நம்மை வாழ்வில் ரசனையோடு வாழ்வதற்கும், மகிழ்ச்சியுடன் இருப்பதற்கும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்விப்பதற்கும்   வித்திட்டு, வாழ்வை அழகாக்குகிறது. நேர்மறை சிந்தனை கொண்டவர்களின் சுபாவமாக,  தனக்கான கவலைகளை நிதானமாகக் கையாண்டும், நிதர்சனத்தைப் புரிந்தும், மற்றவர்களை உற்சாகப்படுத்துவதோடு,  தானும்  நிதானமான வாழ்வை அணுகுவார்கள்.  

      நேர்மறை சிந்தனைகள் என்பது என்னால் முடியும், எனக்கு கிடைக்கும், நான் வெற்றி பெறுவேன், அவனுக்கும் கிடைக்கும் என்ற எண்ண ஓட்டங்களை உள்ளடக்கியது ஆகும். நேர்மறை சிந்தனையாளர்களுடன் நாம் பேசும்போது, நமது தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிப்பதோடு, சிறந்த முடிவெடுக்கும் திறன் புலப்படும்.  வெற்றியின் பாதை தெரியும்.  மேலும், எப்போதும்   மகிழ்ச்சியான மன நிலையுடன் நம்மை இருக்கச் செய்யும். மேலும், உடன் பயணிப்பவர்களை எப்போதும் மித்திரர்களாகக் காணச்செய்யும்.
                                                                             
நாம் தொடர்ந்து நேர்மறை சிந்தனைகள், நேர்மறை எண்ணங்கள், நேர்மறை வார்த்தைகளுடன் வாழ்வினை அணுகும்போது ஏற்படும் பயன்கள் ஏராளம்.  மேலும், அடுத்தவர்கள் மீது பொறாமை, வன்மம் எழாது.   மாறாக, அவர்கள் வாழ்வு சிறக்க, சமர்ப்பண உணர்வோடு வாழ்த்த  தோன்றும்.   எதுவும் பிரச்சனைகளாக தோன்றாது, மன அழுத்தம் ஏற்படாது.   தீயது நேரினும், அதிலிருந்து நன்மையை பிரித்தெடுக்க தோன்றும். நிதானம் அதிகரிக்கும்.  மகிழ்ச்சியான  சூழ்நிலை எப்போதும் அமையும்.
                                                                               
எதிர்மறை சிந்தனையாளர்கள் எப்போதும் ஒருவித சலிப்புடனே வாழ்வை சந்திப்பர்.  “நீங்க எப்படி இருக்கீங்க” என்ற ஒற்றை வரியுடனான சாதாரண விசாரிப்பிற்கே, வாழ்வை நொந்து கொண்டு பதிலளிப்பர். “ஏதோ இருக்கேன்”, “வண்டி ஓடுது”  “நேரமே சரியில்லை”  என்பர்.  இது போன்ற எதிர்மறை சிந்தனை உடையவர்கள், எப்போதும்  தோல்வி பயத்தில் இருப்பர். சுற்றியுள்ள அனைவரும்  அவருக்கு, அவரின் எதிரிகளாகவே தெரிவர். எது நடந்தாலும் திருப்தி அடைய மாட்டார்கள். மகிழ்விற்கான சூழலை ஏற்படுத்த மாட்டார்கள். எப்போதும் எதையோ இழந்தவர்கள்  போல,  புலம்பல்களை  முன்வைப்பவர்களாகவே இருப்பர்.  எப்போதும்  நடந்து  முடிந்த பழைய வலிகளை நினைவு கூர்ந்து, வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பர்.   இதுபோன்றவர்களோடு நாம் பயணிக்கும்போது, இவர்கள் நமது ஆற்றலை வடித்தெடுத்து, நம்மை விரைவில் சோர்வடையச் செய்து விடுவர். நமக்கு திறமைகள் இல்லையோ என, மனரீதியாக பயமுறுத்தல்களை ஏற்படுத்தி விடுவர். மனம் நோகும்படி நமது வாழ்வியல் சார்ந்த குறைகளையும், உடல் சார்ந்த  குறைகளையும் நேரடியாகப் போட்டுடைத்து  நம்மை நோகடித்து, மனதில், ஆறாவடு ஏற்படுத்தி விடுவர்.  வாழ்வை  சுழியமாகிப்போன நிலைக்குத்  தள்ளி விடுவர்.  

நமது சமூகமும் எதிர்மறையான பதில்களையே நமக்கு தர முயற்சிக்கும்.   ஊடகங்கள், சமூக வலைதளங்களும் தவறான, மோசமான செயல்களை திரும்பத் திரும்ப போட்டுக்காண்பித்து, எதிர்மறையான சிந்தனைகள் ஏற்பட செய்து விடும்.  இவை அனைத்தையும்   உடைத்தெறிந்து, நாம் நேர்மறையாக சிந்திக்க முற்பட வேண்டும். எதிர்மறை சிந்தனைகள் நமக்கு இழப்பையே பரிசளிக்கும்.  கோபமோ, விரக்தியோ, பொறாமையோ ஏற்படின், அது மகிழ்ச்சியையும், உன்னதத் தன்மையையும், குழிதோண்டி புதைத்து விடும். நமது  எதிர்மறை வார்த்தைகள், அடுத்தவரையும் சோர்வடையச் செய்வதோடு, நம்மையும் விரக்தியுடன் இருக்கச் செய்யும்.  வலிகள் ஏற்பட்ட தருணங்களை அடிக்கடி நினைவு கூர்ந்து அசைபோடுதல்,  நமது எதிர்கால வளமான வாழ்விற்கான உத்திகளை கண்கொண்டு  காண அனுமதியாது.                                                               

எதிர்மறை எண்ணங்கள் மனிதனுக்கு எப்போதும் தோன்றத்தான் செய்யும். அதனைப் புரிந்து கொண்டால், அதனை உடனடியாக மாற்றி, நேர்மறையாக சிந்திக்கப் பயிற்சி  எடுத்தல் நலம் தரும். நேர்மறையாளர்கள் சாதாரண வெற்றிக்கே மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தி மகிழ்வர்.  எதிர்மறையாளர்கள் பெரிய வெற்றியைக்கூட கொண்டாடாமல், இதைவிடக் கூடுதலாகக் கிடைத்திருக்கலாம் என்ற எண்ண விதையை ஊன்றி, நிகழ்கால சந்தோசத்தை  இழந்து விடுவர்.  நிகழ்காலத்தில்  
வாழ்வதும், சிந்திப்பதும் ஒரு கலை.   அதனைக் கற்கவேண்டும் என்றால், நம்முடன் வசிப்பவர்களில் சிலர், எப்போதும்  நகைச்சுவை உணர்வோடு மகிழ்ச்சியோடு இருப்பதைப் பார்த்திருப்போம்.   அவர்களைத் தொடர்ந்தும்  அவர்கள் பயன்படுத்தும் யுக்திகளைக் கற்றுக் கொண்டோமானால், நமது வாழ்வும்  நிகழ்கால மகிழ்ச்சியைக் காண இயலும்.
        
      நமது வீட்டிலும் நமக்கான அமைதிக்கான இடம் ஏற்படுத்திக் கொள்வதும் சிறந்த நலம் தரும்.  அது பூஜை அறையாகவோ, படுக்கை அறையாகவோ அல்லது மொட்டை மாடியாகவோ இருக்கலாம்.  பிடித்த இசையை ரசித்துக் கேட்பது, பிடித்த நகைச்சுவைக் காட்சிகளைப் பார்ப்பதும், நாளின் துவக்கம் நல்ல எண்ணங்களுடனும், நல்ல வார்த்தைகளுடனும்  இருக்கும்படியான  சூழ்நிலையை அமைத்துக் கொள்ள வேண்டும்.  நேர்மறை எண்ணங்களில் சிந்திக்க பயிற்சி மேற்கொண்ட பிறகுதான் தெரியும், நாம் எவ்வளவு எதிர்மறையாக  சிந்திக்கின்றோம்,  எதிர்மறை வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் என்பதும், நேர்மறை சிந்தனையாளர்களாக மாறுவதற்கு கடினமான சுய பயிற்சியே தேவை.   இந்த அதி தீவிர பயிற்சி, எதிர்  மறை எண்ணங்களால் ஏற்படும்  தோல்வி பயம், மனப்பதட்டம்,   வாழ்வில்  வெறுமை போன்றவற்றை மாற்றி,   மகிழ்ச்சிக்கான ஊற்றைப் பிறக்க வைக்கும். நாம், மற்றவர்கள் வாழ்த்தும்போது, நேர்மறை எண்ணங்களைப் பயன்படுத்தி வாழ்த்துத் தெரிவித்தல், நமது சிந்தனைகளை நேர்மறையாக்கும்.
   
       மனம் நிறைய பழைய குப்பைகளை உறைய வைத்துச் சுமந்து இருப்பது, குப்பை வண்டிக்குக் கிடைக்கும்  மரியாதையே நமக்கும் கிடைக்கும்.    மனம் நிறைய நல்ல எண்ணங்களைக் கொண்டிருப்பது,  “தேரில்” தெய்வங்கள் இருக்கும்போது கிடைக்கும் மரியாதைக்குச் சமமான  மரியாதை கிடைக்கும்.  நம்மை வஞ்சிப்பவர்களையும், துரோகம் செய்பவர்களையும்   நினைத்து நினைத்து வேதனையில் வெதும்பி, திட்டிக்கொண்டே பொழுது கழிந்தால், எதிர்கால நலனுக்கான
நற்சிந்தனைகள், “நெற்பயிர் கதிர்விடுவதற்கு முன்பே கருகி விடுவது”  போலாகி விடும். நாம்,  நமது வாழ்வில் குறுகிய கால இலட்சியங்கள், நீண்டகால இலட்சியங்கள் என, இலட்சியங்களை வகைப்படுத்தி, அதற்கு ஏற்றாற்போல், சிந்தனைச் சிதறல் இல்லாத, தன்னம்பிக்கை கொண்ட விடாமுயற்சி, நமக்கு வெற்றிக்கான  பாதையை,  உடனுக்குடன் புலப்படுத்தும்.
                                                        
நேர்மறை வார்த்தைகள் என்பது, வாழும்வரை என்பதும், சாகும்வரை என்பதும்  ஒரே பொருள்  தரும் வார்த்தைகள்.  இதில்,  வாழும்வரை என்பது நேர்மறை வார்த்தை.   சாகும்வரை என்பது  எதிர்மறை வார்த்தை. மேலும், ஞாபகமாக என்பதும் மறக்காமல் என்பதும் ஒரே பொருளுடன் உள்ள எதிர்மறை வார்த்தைகள்.     மகிழ்வான தருணங்களுக்காக   காத்திருக்கிறேன்   என்பதும்   கவலையுடன் இருக்கிறேன் என்பதும்,  ஒரே பொருள் தரும்  வாக்கியங்கள்   நாம் எப்போதும்   குழந்தைகளிடம்  “மறக்காமல்  வாங்கிட்டு வா”   என்று பேசுகிறோம்.  “ஞாபகமாக வாங்கிட்டு வா” என்று பேசிப்பழகுதல் நலம் தரும். இதுபோன்ற நமது வார்த்தைகளும், நமக்குத் தெரியாமல் கலந்திருக்கும்  எதிர்மறை வார்த்தைகளைக் கண்டுணர்ந்து களைதல்  அவசியம்.                              
.     .  
எல்லாம் என் நேரம், இதெல்லாம் நமக்கு ஒத்துவராது, செய்யவே முடியாது, எல்லாம் விதிப்படிதான் நடக்கும்,   அதெல்லாம்  வேண்டாம், எனக்கு  அதிர்ஷ்டம் இல்லை,  எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை,எனக்கு நேரம் இல்லை, என்னோட  சூழ்நிலை சரியில்லை,  இதனால் என்னால் இதைச் செய்ய முடியல, போன்ற தேவையற்ற சாக்குப் போக்குகளும்,   பிரச்சனைகளை ஊதிஊதி பெரிதாக்கும். சில உறவுகளும், புறம்பேசிப் பிதற்றும் சில சகாக்களும், வம்பு பேசுவதை ஜனன லட்சியமாகக் கொண்டவர்களும்,  நம்முடன்  தொடர்ந்து  பயணித்தால்,  நம் மனம், எதிர்மறை  எண்ணங்களின் கூடாரமாகி,  நம்மை  தோல்வியுடனும், அவநம்பிக்கையுடனும் வாழ வைத்து விடும்.  எப்போதும்   நம்மை வெறுப்பவர்களையும்,  நமக்கு துரோகம்  செய்தவர்களையும்  நினைத்து நினைத்து  வாழ்ந்து வந்தால்,  நமது  எதிர்காலத்திற்கான தீர்க்கமான திடமான வழியை காண இயலாது.  எனவே, அவர்களை, நமது மனதில்  இருந்து இறக்கி வைத்துவிட்டு,  நமது இலட்சியங்களை நமது மனதில் பொருத்தி, கனவு கொண்டவாழ்வை அடைவது    உரிய உயர்வைத்தரும்.   
                                                                           
நாம் எப்போதும் நமது இலட்சிய எண்ணங்களுடன் தெளிவான இலக்கை நிர்ணயம் செய்து, நேர்மறையாக பேசும் கலையைக் கற்றுணர்ந்து, உயர்ந்த எண்ணங்களுடன் சிறந்த செயல்பாடுகளைக் கொண்டு, விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும், சுயமதிப்புடனும், நமது தவறுகளைக் கண்டுணர்ந்து களைந்தும், உரிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டால்,  வெற்றிக்கான  தீர்க்கமான  பாதைகள் புலப்படும்.        

வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும், அவர்களின் வாழ்வியலுக்கான தேடல்களில் மட்டுமே எப்போதும்  கவனம் செலுத்துவர். அவர்களை  எளிதில் சோர்வடையச் செய்துவிட முடியாது. மேலும், அவர்கள் தனி உலகில் இருப்பதுபோல,  அவர்களின் மகிழ்ச்சியை வெளியே தேடாமல், அது,  அவர்களுக்குள் இருக்கும்   பொருளாகவே அமைந்து, எந்த  சூழ்நிலைகளையும் தனதாக்கக்கூடிய வல்லமை படைத்தவர்களாகவே  இருப்பர்.                   
     
     “எண்ணிய முடிதல் வேண்டும்   நல்லவையே எண்ண வேண்டும். திண்ணிய நெஞ்சம்  தெளிந்து,  நல்லறிவு வேண்டும்” என்ற மகாகவி பாரதியின் வரிகளும்   “முயற்சி திருவினையாக்கும், முயன்றால் முடியும்”    - என்ற லேனா தமிழ்வாணன் வரிகளும்  “மனிதன் தனது மன நிலைகளை மாற்றிக்கொள்வதின் மூலம், தனது வாழ்க்கையை  மாற்றிக்கொள்ளலாம் என்பதே, நமது தலைமுறைகள் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்“ என,  மனநிலை நிபுணர் வில்லியம் ஜேம்ஸ் வரிகளும்,  “தீதும் நன்றும் பிறர்தர வாரா” – என்ற கணியன் பூங்குன்றனார்  வரிகளும் -  நமக்கு நேர்மறையான  சிந்தனையையும், நேர்மறையான பேச்சையுமே வலியுறுத்துவதோடு, காலத்தை மாற்றி அமைக்கும் சக்தி, நமது எண்ணங்களுக்கு உண்டு என்பதை உணர்த்துகிறது.

           

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி