வாழ்வியல் கலை- இறைநம்பிக்கை பற்றிய தெளிவு


இறைநம்பிக்கை பற்றிய தெளிவு:-  

நாம் பிறந்து வளரும் சூழ்நிலைகள், நமக்கான இறைமார்க்கத்தை தீர்மானிக்கிறது. கடவுள், இறைவன் என்பவர் பிரபஞ்சம் முழுவதையும் படைப்பவராகவும், காப்பவராகவும், இறப்பை தீர்மானிப்பவராகவும்  உள்ள மாபெரும் சக்தி கொண்டவராக, இறைநம்பிக்கை கொண்டவர்களால் நம்பப்படுகிறது.  பல்வேறு மதங்களை ஒட்டி, இறைவன் பலவித வடிவம் பெறுகிறார். அன்பும், கருணையுமே  கடவுள் என்றும்,  இயற்கையே  கடவுள் என்றும், இறைவன் உருவமற்றவர் என்றும் பல்வேறு விதமாக  நம்பப்படுகிறது.   பிரபஞ்சத்தின்  மொத்தத்தையும்,  கடவுள் என்ற ஒருவரோ/பலரோ ஆளுமை செய்யவில்லை என்பது,  கடவுள் மறுப்பவர்களின் கருத்தாகவும் உள்ளது. கடவுள் மனிதனை படைத்தார் என்பவர்கள், கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆத்திகர்கள் என்றும், மனிதன் கடவுளை படைத்தான் என்பவர்கள்  கடவுள்  நம்பிக்கை இல்லாதவர்கள்  நாத்திகர்கள்  என்றும் சுருக்கமாக எடுத்துக்கொள்ளலாம்.         
      இந்த கட்டுரையின் நோக்கம் கடவுள் இருக்கின்றாரா, இல்லையா, எந்த கடவுள் சிறந்தது என்ற விவாதத்திற்கு இடமளிக்காமல், அவரவர் மத உணர்வுகளை மதித்து, அடுத்தவரை குறை கூறாமல்,சிறப்பானதொரு சகமனித நேயத்தோடு பவித்திரமாக வாழ்தல் என்ற தீர்க்கமான பார்வை, மிக்க நலம் தரும்.    மேலும், அனைத்து ஜீவன்களுமே அடைக்கலம் தேடுவது அன்பு மனங்களையே என்ற புரிதல் வாழ்வியலில்  பூரணத்துவம் தரும்.    

       கடவுள்  பல உருவம் கொண்டவர் என்றும், கடவுள் ஒளிவடிவமானவர் என்றும், கடவுள் ஒருவரே என்றும், கடவுள் உருவம் அற்றவர் என்றும், பல்வேறு  மதங்கள் வழியாக, பல்வேறு விதமாக நம்பப்படுகிறது. எது எப்படி இருப்பினும், அவரவர் மத நம்பிக்கைகளை, சமர்ப்பண உணர்வோடு, பாரபட்சமின்றி மதித்து,  பிற மதத்தினர் மத உணர்வுகளை மதித்து, மனித நேயத்துடனும்,  நட்புடனும் பழகுதல்,  அனைவரையும் சிறப்புறச்செய்யும். நிதர்சனத்தைப் புரிந்து,  எனது கடவுள் பெரியவர், உனது கடவுள் சிறியவர் என்ற தேவையற்ற விவாதத்திற்கு கடவுளை ஆட்படுத்துவது, மனிதனின் மிகப்பெரிய அறியாமையையே காட்டுகிறது. அதோடல்லாது,  ஆறுகள் இறுதியில் கடலை சென்றடைவது போல, மதங்கள் என்பவை, இறைவனை சென்றடையும் மார்க்கம் என்ற கருத்துப்புரிதல்  அவசியம் என ஆன்மீகப் பெரியார்கள் கருதுகின்றனர். 


       மதங்கள், இறைவன் என்ற பெயரால் அடுத்தவரை மனதில் உறையவைக்கும் அளவு காயப்படுத்தலும், ஏதோ பலனை நோக்கி அவதூறு பேச்சு, வன்சொல் பிரயோகம் போன்றவற்றால் தூண்டிவிட்டு, குளிர் காய்தலும் நடத்தலிலிருந்து  நம்மை ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருத்தல்,  நமது அறிவை மேலும் யோக்கிய நிலைக்கு உயர்த்தும்.  .
இறைநம்பிக்கையில் பின்பற்றப்படும் அனைத்தும் மூட நம்பிக்கைகள் என ஒதுக்கி விடாமல், அதில் பிரதான ஆதாரத்தோடு அறிவியல்  ஒளிந்திருக்கின்றதா?  என்று அறிவினை பயன்படுத்தி  தேடி விடைபெறுதல்,  வம்சம் தழைக்க வாழ்ந்த  நம் முன்னோர்களை மதித்தலுக்கு  வழிவகுக்கும். மேலும், மூடநம்பிக்கையாக பின்பற்றப் படும் சம்பிரதாயங்கள் என்பது, நமது குழந்தைகள்,பெண்களின்  மனதை வேதனைப் படுத்துவதாகவோ, சிறகைவிட்டு இறகை பிய்த்து எடுப்பது போல  எதிர்காலத்தை சீரழிப்பதாகவோ இருப்பின், அதனை அறிவு கொண்டு பகுத்தறிந்து. விட்டொழித்தல் நலம் தரும்.   மனித வாழ்வென்பது, அவரவர் கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மை தீமைகள் அமையப்பெறுவது என்பது ஆத்திகர்களின் கருத்தாகவும், மற்றவ்ர் சொன்னவற்றைக்கொண்டு அதனைப் பின்பற்றாமல், பகுத்தறிவு கொண்டு முடிவுக்கு வரவேண்டும்  என்பது, நாத்திகர்களின்  கருத்தாகவும்  உள்ளது.  மேலும், நாத்திகன் என்றால் கடவுள் மறுப்பு என்றல்லாமல், மற்றவர் சொல்லிவைத்ததைக்கொண்டு முடிவுக்கு வந்து விடாமல், அவரவரின் சொந்த புத்தியைக்கொண்டு முடிவுக்கு வருவது,  நாத்திகம் என்றும் தெளிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.        
”நீ எதுவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ அதுவாக ஆவாய்”  -  விவேகானந்தரின் பொன்மொழியின் வழி பார்த்தோமானால், இறைவன் என்பவர் அவரவர் மனதிற்குள் இருப்பதாகவும், மனதை ஒருங்கிணைந்து பதிய வைக்கப்படும் நோக்கங்கள் நிறைவேறும் என்பதும், ”கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்”  என்ற கிறித்துவ கோட்பாடு என்பதும், மனதை ஒருநிலைப்படுத்தி, கேட்கப்படும் நோக்கங்கள் நிறைவேறும் என்பதும் இறைநம்பிக்கை கொண்ட  ஆன்மீகவாதிகளின் கருத்துக்களே. கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும், எப்போதும் மோதிக்கொண்டே இருப்பதை விடுத்து, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, வேதனையில் வெதும்பும்போது  கஷ்டங்களுக்கு செவிசாய்த்து ஆறுதல் தேடவும், தேவையானவற்றை வேண்டிப்பெறவும், யாரும் தேவையில்லை என்ற நிலையில் அவ்வாறான நிலை தேவைப்படுபவர்களை நிந்திக்காமல், அவர்களுக்கு நம்பிக்கையோடு, அவர்களை வாழட்டும் என்ற புரிதல் அதிஉத்தமம்.

மேலும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஏதோ மாபெறும்  துர்பாக்கிய தவறிழைப்பவர்களைப்போல பார்த்தலும்,சைவ உணவு சாப்பிடுபவர்கள் ஏதோ உத்தமர்கள் போல பார்த்தலும்  தவிர்த்தல் என்பது மிகப்பெரிய புரிதல் ஆகும்.
   
கர்மவினைகளின் பலன்களால் அமையும் மனித வாழ்வும் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய அனைத்தும் இறைவனால் படைக்கப் பட்டதாகவும், உரிய வாழ்வியல் வழிகாட்டுதல்களை வழங்குவதே  ஆன்மீகம் என்றும், அதனை ஏற்பவர்கள் ஆத்திகர்கள் என்றும்,   இவை அனைத்தும்  இயற்கை.  மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்றும்,  கடவுள் என்றொன்று இல்லை என்றும் எண்ணம் கொண்டவர்கள் நாத்திகர்கள் என்றும், ஆஸ்திகர்கள், நாத்திகர்களின் மோதல்களாலும்   ஒருவொருக்கொருவர் குறைகூறிக் கொள்வதினால் இறைநிலைக்கு  பாதிப்பேதும் ஏற்படப்போவதில்லை. அவ்வாறான மோதல்களில் குளிர்காய்பவர்களாக உள்ள   போலி சாமியார்களின் கடவுளின் பெயரால் காட்டப்படும் கண்கட்டு  வித்தைகளில் மயங்கி, அவர்கள் வழி செல்வதும், செல்வங்களை இழப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.   இறைநம்பிக்கை என்பது, ஏமாற்றி பொருள் சேர்க்கும்  நபர்களின் கூடாரமாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்வது, இறைநம்பிக்கை உள்ளவர்களின் அறிவுத்திறனைப் பொறுத்ததே.  எப்போது மதமாற்றத்திற்காக ஜனன லட்சியம் எடுத்து செலவிடும்   கும்பல்களின்  நோக்கங்கள் இறைவனுக்கானது அல்ல என்பதும், சூழலுக்கேற்ப  வாழ,  மனித இனம்  தன்னை  சரணாகதி அடையச் செய்வதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.      

    அண்டை வீட்டார்களின் வேறு மதம் சார்ந்த இறை நம்பிக்கைகளை குறைகூறி தூற்றாமல் அவர்களின் மத நம்பிக்கைகளை, நாமும் மதித்து நடந்தால்,  இரு வீட்டார்களுக்கும் நிம்மதியான, மகிழ்வான  வாழ்வியல் பயணங்கள் தொடரும்.           
இறைவழி பின்பற்றல்கள், காலம்காலமாக பின்பற்றப்படும்  கலாச்சாரங்களோடு தொடர்புடையது.  இது அறிவியல் சார்ந்ததாகவோ,சாராததாகவோ,  மனித இனம் கூடி வாழ்வதற்கான ஒழுங்குமுறை விதிகளுடன் வடிவமைந்துள்ளது.  இவ்வகை பின்பற்றல்களில்  இப்போதைய காலத்திற்கு ஏற்றவாறு, நம் வாழ்வியலுக்கு தடையாக உள்ளதையும், நசுக்கலாக உள்ள பின்பற்றல்களையும், சில மூடநம்பிக்கைகள் நரகத்தின் மறுவடிவாக அடிமைத்தனமாக்கும்  பின்பற்றல்களையும் மன அறிவைக்கொண்டு தெளிந்து, கைவிடுதல் எதிர்கால சந்ததிகளை காப்பதோடு, வேறு மதத்தினர்கள் தூற்றும்படியாக அமைவதை தவிர்க்கலாம்.

   ” ஏழையின் சிரிப்பில் இறைவனைக்  காணலாம் “ என்ற பொன்மொழி கொண்டு பார்த்தோமானால், சகமனிதர்களின் மகிழ்ச்சியுற செய்தலில், நாம் இறைவனை அறிய இயலும் என்பதே.   

     சமய பின்பற்றல்கள் அனைத்தும் சுய நல வாதிகளாக வாழவோ, குரோதத்துடன் செயல்படவோ, சதி ஆலோசனையுடன் வாழவோ  அடுத்தவர்களை கொடுமைக்குள்ளாக்கவோ போதிக்கவில்லை.   அனைத்து மதங்களும்  மனித இனம் மகிழ்வாக வாழ்வதற்கான  திவ்யத்துவத்தை போதிக்கிறது.  பகவத் கீதை படிப்பதற்கு இந்துவாகவோ, பைபிள் படிப்பதற்கு கிறித்தவராகவோ, குரான் படிப்பதற்கு இஸ்லாமியராகவோ இருக்க வேண்டியதில்லை என்ற பொதுப்புரிதல் அனைத்து மதத்தினரிடையே ஏற்பட வேண்டும்.    அனைத்து மத நூல்களிலும் மனித இன காப்பாற்றுதல்களுக்கான நல்மார்க்கத்தையே போதிக்கிறது மற்றும் இந்த உலகம்  பயன்பெறும் வகையில், பொதுவாகவே எழுதப்பட்டிருக்கிறது.   கடவுளின் பெயரால் உள்ள பயமுறுத்தல்களால் மனித இனம் தவறுகளுக்கு ஆட்படாமல்,பாவம், புண்ணியம்  பார்த்து எது சரி, எது தவறு என்பதை உணர்ந்து, நல் வாழ்வுவாழ வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டாலும், அதனை எடுத்துக்கொள்பவர்களின் விதத்தில்தான், அதன் புரிதல் அமையும். எல்லா மதம் சார்ந்த இறைவனும், மனிதனுக்கு தேவையான அன்பு, அறம், பண்பு, பாசம்,கருணை போன்ற தர்ம சிந்தனைகளால் மன நிறைய வேண்டும் என்பதையே போதிக்கிறது

.   ஆத்திகராக இருப்பதோ, நாத்திகராக இருப்பதோ வாழ்வில் ஏற்ற இறக்கங்கள், இன்ப துன்பங்கள் போன்ற சிக்கல்களில் இருந்து,  முற்றிலும்  விலக்கி வைக்க இயலாது. அவரவரின்  திறமை மற்றும் தைரியம் போன்ற பண்புகளால்,    அவரவரின் வாழ்வு வடிவமையும்.
    கடவுளை நம்புவதால் ஆத்திகர்கள் அனைவரும்  சுய ஒழுக்கத்துடன்  இருப்பார்கள் என்பதற்கும், கடவுளை நம்பாத நாத்திகர்கள் சுய ஒழுக்கம் இல்லாதவர்கள் என்பதும் “வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்” என்பது போல். கடவுள் நம்பிக்கைக்கும், சுயஒழுக்கத்திற்கும் தொடர்பில்லை. அவ்வாறாக இல்லை என வாதிடும்படியானால்,  ஆத்திகர்கள் சதவீதம்  அதிகம் உள்ள நாட்டில், ஏன் குற்றங்கள் கொலைகளும், பாலியல் வன்மங்களும், திருட்டுக்களும் தொடர்ந்து  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதனை ஆராய்ந்தால், தெளிவு தரும்.    மேலும், கடவுளின்  பெயரால் உள்ள ஆசிரமங்கள்/கன்னிமாஸ்திரி மடங்கள் போன்றவற்றில் கூட, தவறுகள் நடைபெறுவதைக் காணலாம்.  
    இறைநம்பிக்கையின் நோக்கம்,  மனித இனம் முறையான வாழ்வை பின்பற்றி, சுயஒழுக்கத்துடன் வாழ்ந்து மனிதநேயத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதற்காகவும், மனஅமைதி ஏற்படுத்தி, மனதை ஒருநிலைப்படுத்தி, தெய்வீக இறைநிலையை உணரவேண்டும் என்பதற்காகவும், உலகை படைத்தவன் என்பதால், தவறுகள் ஏற்படுத்தாமல் வாழவேண்டும்  என்ற பயம் கலந்த பக்தி உணர்வை ஏற்படுத்துபவர்களையும், ஏற்படுத்தப்பட்ட இறைவழிப்பாதை அனைவரையும், சுய ஒழுக்க சீலர்களாக இருக்கச் செய்தால், அதுவே நலன் தரும்.   
இறைநம்பிக்கை இல்லாதவர்கள், இறைநம்பிக்கை கொண்டவர்களை கிண்டல்,கேலி செய்வதை பிரதானமாக கொள்ளாமல், அவரவர் விருப்பதின்பேரிலான நம்பிக்கையை உடைத்தெறிய முற்படாமல் இருத்தலும்,  அடுத்தவர்  இறை நம்பிக்கையையும், மத வழிபாடுகளையும் மதித்தல், வாழும்போது, சக மனிதர்களுடனே நட்பை இன்னும் விரிவுபடுத்தும். என்வழி தனிவழி என்பதுபோல, அவரவர் வழி தனித்தனிவழியாக இருப்பதில் தவறேதுமில்லை. எவ்வாறாக இருப்பினும், ஆத்திகர்களும், நாத்திகர்களும் கண்ணுக்குப் புலப்படாத இறைவனை மையப்படுத்தி, சண்டையிட்டுக்கொள்வதும், உன் இறைவன் சிறியவன், என் இறைவன் பெரியவன் என மார்தட்டிக்கொள்வதால், யாருக்கும் எப்பிரயோசனமும் இருக்கப்போவதில்லை என்ற புரிதல் உருப்பெற வேண்டும்.   அதிதீவிர காலநிலை மாற்றத்தினால்,  ஒருவேளை இறைவன் நேரில் வந்தாலும்கூட,  அவரை வைத்து நாம் இடும் சண்டைகளை, அவரே ஏற்கமாட்டார் என்பதன் புரிதல்  அவசியம்.

        
      இறைவன்  இருக்கின்றாரா, இல்லையா,  எந்த மத இறைவன் பெரியவர், எவரின்  நம்பிக்கையில் உள்ள இறைவனின்  தோற்றம் உண்மை என்பதை பற்றி எல்லாம் இக்கட்டுரையில் விவாதிக்கவில்லை. எந்தமதக் கடவுளை பின்பற்றினும்  இறை நம்பிக்கை  அற்றவராயினும், ஜகத்தில் மனித வாழ்வில்   சக மனிதர்களுடன் சினேகம் குடிகொண்டு இனிமையாக வாழும் கலையை கற்பதே இப்பதிவின் நோக்கம்.   

     காலத்தை மாற்றி அமைக்கும் சக்தி,  நமது ஆழ்மன எண்ணங்களுக்கு உண்டு.   தேவையற்ற சூழ்நிலை  சங்கிகளை உடைத்தெறிந்து, விருட்சத்தின்  தன்மை கொண்டே கனியின் சுவை அமையும்  என்ற நிதர்சன புரிதலோடு மத, இன வேற்றுமையிலும், ஒற்றுமையுணர்வுடன் மகிழ்வாக வாழ பழகுதல், அனைவருக்கும் நலம் தரும்.   


          




Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி