வாழ்வியல் கலை-பதின்பருவ துளிர் காதல்

                                                                                             
பதின்பருவ துளிர் காதல்:-
                 ***
      பதின் பருவத்தில் ஏற்படும் காதல் எனபதான உணர்வு,  உடலின் வேதியியல் மாற்றத்தினால் உந்தப்பட்டு, மாற்றுப் பாலினத்தினர்மீது ஏற்படும் அதீதமான அன்பின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. இது, எந்த வயதில் ஏற்பட வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடுகள் சமூகத்தால் மட்டுமே வைக்கப்படுகிறது.  இவ்வாறான ஏற்படும் மாற்றங்கள்,  இயற்கைக்கு உட்பட்டதே என்பதை உணர்தல் அவசியம்.  எல்லா உயிரினங்களின் வேதியியல் மாற்றங்கள் நமக்கு வெளியே தெரிவதில்லை. ஏனெனில், அவற்றிற்கு யாரும் தடை போடுவதில்லை.   


       ஒரு வேளை,  மனித இனமும் விலங்குகள்போலே ஐந்தறிவுடன் இருந்திருந்தால்,   மனித இனக்காதல்கள் அனைத்தும்  உரிய நபருடனான இணக்கமான காதலாக உருப்பெற்றிருக்கும். ஆறாமறிவின் யோசனையே இனம், மதம், வயது, அந்தஸ்த்து, சமூகப்பார்வை, கட்டுப்பாடுகள் ஆகியவையே பல காதல்கள் உணர்வு,  இளமொட்டுகளாகக் கருக  காரணமாகி,  மனதில் உறைபொருளாக மாற்றப்படுகிறது. 

           
     பதின்பருவ  துளிர்கின்ற காதல்களை “இந்த வயசுல உனக்கு காதல் வேண்டிக்கிடக்கு”  - “பிஞ்சிலேயே பழுத்தது போல’ என,  நமது அளவுகோல்களில் எந்த நபர் மீது,எப்போது  ஏற்படவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் ஏராளம்.   மதம், இனம் என்ற பெரும் சுவர்கள் இங்கே உள்ளதை மறுப்பதற்கில்லை. சமூகக் கட்டமைப்புக்குள் இருக்கும் ஏகப்பட்ட அளவுகோல்களைக் கடந்தே, காதல் ஏற்பட்டு விடக்கூடும் என்பதே நிதர்சனம். ஆணோ, பெண்ணோ பருவ வயதில் ஏற்படும் காதல் உணர்வு,  தவறுகளுக்கு  வழிகோலாமல்,  திருமணத்தில் முடிய வேண்டும் என்பதே - சமுதாயம்   காதல் என்ற வார்த்தைமீது  வைத்திருக்கும் கோட்பாடு.
    

     சில நேரங்களில் நேரவிருக்கும் நிகழ்வை அறிந்திராமலேயே, சிலவிடலைப் பிஞ்சுகளின் அதீத மனத்தாக்கங்களால் வகுக்கப்பட்ட எல்லையும் உடைபடும். அவ்வமயங்களில் விளைவுகளைப்பற்றிய சிந்தனை முன்யோசனையாக வராமல், இச்சைகளுக்கு ஆளாகிவிடுவதால், பெண் பாலினம் பருக அருகதையில்லா நதிநீர் போல,  எதிர்கால வாழ்வு  மாறுவதற்கான சூழலை உருவாக்கி விடுகிறது.   
  படித்து முடித்து ஒரு வேலை கிடைத்து, வருமானத்திற்கு வழிசெய்துகொண்ட பிறகு வரும்  காதல்தான்,  பெரும்பாலும்  வெற்றியை நோக்கி நகர்கின்றன.   அதுவே முதல் காதல்தானா? என்ற கேள்விக்கு பெரும்பாலும் `ஆம்’  என்ற பொய்யான பதிலாக வெளிப்படும்.  ஒருவரின் ரகசியம், மற்றவருக்கு ஆயுதமாகுதலை தடுத்தலுக்கான சூழ்நிலையியல்  சமாளிப்புகளாக அமைந்து விடுகிறது.     


  சில பதின்பருவத்தினர் சூழ்நிலையியல் சங்கிலிகளால்,  கனவு கண்ட வாழ்வு கலைந்தோடும்போது ஏற்படும் மனரணம் தாங்க முடியாமலும், அகத்தில் எரியும் அவமான நெருப்பாக ஊதி பெரிதாக்கும் சமூகத்தினாலும், உயிரை துச்சமென மதித்துவிடும் சூழலுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. இவ்வகை உயிரிழப்புகள் நடைபெறாமல் காத்திடவேண்டிய கடமை  சமூகத்திற்கும்   உண்டு.    


   செய்தி செவிக்கு எட்டியதும் ஊதுகோல் கொண்டு ஊதி, அவதூறுபேசி, வன்சொல்கூறி, அவமான நெருப்பை பிஞ்சுகளின் முகத்தில் எரிய விடப்பட்டு, இருண்டு வரும் எதிர்காலம் கண்டு மிரண்டு, அதுவே எதிர்வினைகளை ஏற்படுத்தக் காரணமாகிறது. புறம்பேசும் சமூகப் புல்லுருவிகளின் சமூக அக்கறை இன்மையே இதற்குக் காரணம்.   சமூக அக்கறையுடன், குழந்தைகளை நிதர்சனங்களை நிதானமாக சொல்லிப் புரியவைப்பதும், வாழ்வின் பெரிய முடிவுகளை எடுக்கும் தருணம் இதுவல்ல என்றும்  புரியவைத்து விடவேண்டியது,  பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின்  தலையாய கடமையே.   


    சில ஆண்மகவுகள் பெண்மகவுகளின் உடல் வசீகரத்தின்மீது இச்சை கொண்டு, தன்வயப்படாத பெண் மகவு முகம் பொலிவிழந்து விடவேண்டும் என்ற நோக்கத்துடன்  ஈனச்செயல்களில் ஈடுபட்டு விடுவதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.  இது போன்ற மாபாவச்செயல் நடவாது காப்பதும், ஆண் மகவுகளுக்கு தனதெல்லை எதுவென்று போதித்தலும் மிக அவசியம்.   


விலங்குகள் போல் மனிதன் காதல் கொள்ள இயலாது.  சமூகக் கட்டமைப்புகள் இருக்கும் அளவுகோலுக்கேற்ப ஏற்படும் காதல்களே  மேடை ஏறுகின்றன.   அதையும் மீறி மேடையேறும் காதல்கள்,  அந்தக் காதல் உணர்வு உள்ளவர்களின் வலிமையைப் பொருத்தே, சூழ்நிலையியல் கட்டமைப்பின் அளவுகோல்களை உடைத்தெரிந்து  மேடையேறும்     


        வீட்டுப் பிஞ்சுகள் விடலைப்பருவத்தில் காதல் உணர்வில் சிக்கும்போது, அதனை,  “முள்மேல் விழுந்த சீலை எடுப்பதுபோல்” எடுக்கப் பழக்குதலே  நல்லது.  இது வேதியியல் மாற்றத்தினால் ஏற்படும் நிகழ்வுதான்  என்பதை பெற்றோர் புரிந்து கொண்டு, விடலைகளுக்கும் அதன் புரிதலைப் பக்குவமாக எடுத்துரைத்து, உரிய மனப்பக்குவத்தை வரவைப்பதே,  அவர்கள் மேலும் சிக்குறாமல் இருப்பதற்கு வழிவகுக்கும் என்பதில் பெற்றோரின் தெளிவான பார்வை அவசியம்.   


     பெற்றோர் இதனை, இதுபோன்ற காதலில் விழுந்த விடலைகளின் வாழ்வு பொலிவிழக்காமலிருக்க, முழுமனப்பக்குவத்துடன் அணுகுதலும், பதின்பருவ குழந்தைகளுக்கு  நன்னெறியை உரிய வயதிலேயே பயிற்றுவிக்க வேண்டும்., ஆசிரியர்களும் சமர்ப்பண உணர்வோடு உரிய நேரத்தில் இக்கல்வியைப்  போதித்தல்  அவசியம்.   

     சில ஆண்டுகள் இருபாலினத்தவர்கள் பயிலும் பள்ளியில்,  பதின்பருவ குழந்தைகளுக்கு ஆசிரியையாக  பணியாற்றியபோது கண்ட அனுபவங்களின் தொகுப்பே இது. 
         
     உலகில் நடப்பவை எல்லாம் விதியின் விளையாட்டு என ஒதுக்கிவிடாமல், ஆத்மார்த்த உணர்வோடு, விசாலப்பார்வை கொண்டு, புறம்பேசும் அனாச்சார       செயல்களுக்கு  முடிவுகட்டி  மகவுகளை மதித்துக் காப்போம். 

     74-வது சுதந்திர தினத்தின் சுதந்திரக்காற்றை அனைவரும் சுகமாக சுவாசிப்போம்.
   
                ******************


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி