வாழ்வியல் கலை-பெண்கள்

பெண்களுக்கான வாழ்வியல் கலை

 காலம் காலமாக பெண்களைக்  கொண்டாட, நம் சமூகம் சொல்லிக் கொடுத்துக் கொண்டேதான்  இருகிறது. பெண்களின் பெயர்களிலேயே ஆறுகளுக்கு பெயர் சூட்டியும்,  பெண்கள் நாட்டின் கண்கள், பூமிக்கே பூமாதேவி என, பெண் பெயரை இட்டும்  பெருமைப் படுத்தப்பட்டுள்ளது. 


   நம்மைப் பற்றிய சுய மதிப்பீட்டை மிகச்சரியாக வைத்து விட்டோம் என்றால், அவ்வாறே சமூகத்தின் பார்வைக்கும் தெரிவோம். அடுத்தவர் நம்மை சரியாகக் கணிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வத்தை விடுத்து, நம்மை நாம் சரியாக சுயமதிப்பிடுதலில்  ஆர்வம் காட்டுவோம்.  மேலும், நம்மால் தவறென்று அறியபடுவதைக் களைவோம்.  


  பெண்களில் சிலர், அடிக்கடி பிரச்சனைகளில் சிக்குண்டு விடுகின்றனர். அவர்கள் தீர்வுகளைத் தேடுவதில்லை. பிரச்சனைகளை சவாலாக எதிர்நோக்கும்  மனப்பக்குவத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மேலும், பல பெண்கள் பிரச்சனைகளில் இருக்கும்போது, கோபமோ, அழுகையோ வெளிப்பட்டு - . அது சிந்திக்கும் திறனை குறைத்து விடுகிறது. பெண்கள் பிரச்சனைகளே இல்லாமல் வாழ வேண்டும் என்றால், பொம்மைகளாக இருந்திருக்க வேண்டும்.  பிரச்சனைகளை சவால்களாகக் கருதும்  கலையைக் கற்றலே நன்று.  


    பெண்கள் வாழ்வில் தங்களது இலக்கை சரியாக வகுத்துக்கொள்ள வேண்டும்.  பெண்களுக்கு ஆண்கள் எதிரிகள் அல்ல. சொல்லப்போனால், பல பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆண்களே காரணமாக இருக்கின்றனர். பெண்கள்தான் பெண்களுக்கு பல சமயங்களில் எதிரிகளாகின்றனர். பெண்களுக்கான இடத்தை ஆண்கள் பறித்துக் கொள்வதில்லை.  பெண்களுக்கான இடத்தை ஆண்களிடத்தில் தேடுவதே பெண்களின் தவறு.   நமக்கான இடம் எது என்பதனையும், அதனை நாம் சரியாக அடைந்துவிட வேண்டும் என்ற முயற்சிகளும் அவசியம்.  


    பருவ வயதில் ஹார்மோன்களில் ஏற்படும் உடல்ரீதியான  மாற்றத்தினால், புரிதல் இன்றி பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டு, எதிர்கால முன்னேற்றம் தடையாகிப் போவதை  தவிர்க்க, குழந்தைப் பருவத்திலேயே கற்றுத்தர வேண்டும். 


    பெண்கள்,  அழகுப்பதுமைகளாக வலம் வருவதற்காக அல்ல.  நாட்டின் கண்களாக சித்தரிக்கப்பட்டுள்ளபடி அன்பானவர்களாகவும், திறமைசாலிகளாகவும்  உருவாக்குதலில், அக்கறை காட்டுதல் நன்று.   


    வாழ்வியல் என்றால் என்ன என்று  புரிகின்ற வயதிற்கு முன்னரே,  பல பெண்களின் திருமண வாழக்கையின் துவக்கம் ஏற்பட்டு விடுவதற்கான காரணங்கள் பல. பெண்களுக்கு தெளிவுறக் கற்பித்தல் அவசியமாகிறது.   இது சமூகத்தின் கடமையாகும்.   தெளிவான சிந்தனையுடன் பகுத்தறியும் திறன் உள்ள பெண்களால், “பெண்களை  சமமாக பாவிக்கும் மனநிலையுள்ள நல்ல ஆண் குழந்தைகளை உருவாகக முடியும்”  என்பதில் ஐயமில்லை.  


    சில தெளிவற்ற சூழ்நிலைகளில் வளர்க்கப்படும் ஆண்குழந்தைகள், பெண்கள் அடிமைகள் என்ற எண்ண விதைகளுடன் வளர்ந்து ஆளாகி, சமூகத்தில் விடப்படுவதில்தான் சிக்கல்கள் பூதாகரமாகி விடுகின்றது.   அவனே தன்னுடைய தாய், தன் மனைவி, தன் தங்கை, தன் மகள் ஆகியோரை நசுக்கவே முற்படுதல் நிகழ்ந்து விடுகிறது.    வாழ்தல்  என்பதும் ஒரு கலை.  அதனைக் கற்றலும், கற்பித்தலும் மிக அவசியமான ஒன்றே – பள்ளிப்பாடங்களில் சொலித்தரப்படாத ஒன்றாகவே இது அமைந்து விடுகிறது.  தற்போது, சில கல்லூரிகளில் ஆண் பெண் பேசிக்கொள்வதுகூட பெரும் குற்றமாகக் கருதும் நிலையுள்ளது.   இவ்வாறான படிப்பினையுடன் வளரும் பெண்கள் அலுவலக ரீதியாகவும், ஆண்-பெண் இருபாலருடனும் பணிபுரியும் நிலை ஏற்படும்போதும், இருபாலருக்கும்  பழகுதலில்  தடுமாற்றங்கள் ஏற்பட்டு விடுவதற்கான வாய்ப்பாகிறது. வாழ்வியல் கலை  கற்க வேண்டிய வயதில் கற்காமல்  போனதற்கான  விளைவே இது.    


      பெண்களுக்கான முக்கியத்துவம்  அளிக்கப்படாத  நேரங்களில் சில இடங்களில்   மறைமுக ஆளுமை ஏற்பட்டுவிடுவதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். இது போன்ற நிகழ்வுகள் சமூகத்தில் எதிர்மறை செயல்களுக்கு வழிவகை செய்து, ஒரு இணக்கமற்ற சூழ்நிலை உருவாக்கி சமூக வளர்ச்சியைப் பாதிக்கும்  என்பது நிதர்சனமே.. .         


          பெண்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஆண்களை மரியாதைக் குறைவாக நடத்துவதிலும், குடும்ப சூழலில் இருந்து  விலகி நிற்பதும்,  ஆணவப்போக்கையே  காண்பிக்கும்.  நமது சமூகம்,  குடும்பம் என்ற அமைப்பிற்கு அளிக்கும் முக்கியத்துவம், எதிர்கால சந்ததியினரைக் கருத்திற்கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.   இதனை உடைத்தெறிவது  பெண்  சுதந்திரம் ஆகா.   


   குழந்தைப்பருவத்திலேயே வாழ்தலின்  முக்கியத்துவம் மற்றும் அதனை திறம்படக் கையாண்டு சந்தோஷம், மகிழ்ச்சி, ஆனந்தம், பேரானந்தம் என  சந்தோஷத்தின் நிலைகளைக் கடக்க கற்பிக்க வேண்டும்.   நன்கு படித்து நிறைய சம்பாத்தியம் உள்ள பலருக்கு குடுமபத்தினருடன் நட்புடனும், இயல்பான சந்தோஷ மனநிலையுடனும், பழகத் தெரிவதில்லை.    மதிப்பெண் பெற ஆசிரியர் கற்பிக்கின்றனர்.   வாழ்வியல் பாடத்தை பெற்றோர் இரு பாலருக்கும் வாழ்ந்து காண்பித்து சொல்லித்தந்தால், பெண்கள் நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும்.     


       இருபாலரும் சேர்ந்து வாழும் வாழ்வியலில் அடிமைத்தனத்திலிருந்து விலகுகிறோம் என்று எண்ணிக்கொண்டு, அன்பு என்ற கட்டமைப்பையும், குடும்பம்  என்ற கூட்டையும் உடைத்துவிடக்கூடாது. மேலும், ஆண் பாலினத்தைத் தவறாக சித்தரிப்பதும், அவர்களை எப்போதும்  ஆணவக்காரர்களாகப் பார்ப்பதையும் விடுத்து, விட்டுக் கொடுத்தல் என்பதற்கும், அடிமைத்தனம் என்பதற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்தும், இருவரும் சிறு சிறு தவறுகளைக் களைந்தும்,  அன்புக்குரியவர்களாக மாறி, குடும்பத்தில் சிக்கல்களைத் தவிர்த்து மகிழ்ச்சியான வாழ்வை வாழ, வாழ்வியல் பாடத்தை ஒரு கலையாக பெண்கள் கற்க வேண்டும்.  


      இருபாலருக்கும் மிகுந்த  மகிழ்ச்சி அளிக்குமிடம் சந்தேகமின்றி அவரவர்களின்  குடும்பமே. குழந்தைகளுடன் குதூகலத்துடன் மகிழ்ச்சி பெற வேண்டிய இடத்தை, தேவையற்ற சந்தேகங்கள், தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள், உடல் ரீதியான  தாக்குதல்கள் என, சில இடங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.    அவ்வாறான சூழ்நிலைகள் இருவருக்கும் மகிழ்ச்சியை அளிக்காதபோது,  தற்கொலை போன்ற விபரீத நிகழ்வுகளும் ஏற்பட்டு விடுகிறது.    மேலும், இது போன்ற சமாளிக்க இயலாத சூழ்நிலைகளில், பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளவும், எதிர்கால சந்ததியினருக்காகவும், தன்னை அந்த வீபரித சூழலில் இருந்து விடுவித்துக் கொள்வதிலும், தனக்கான பாதையை,  தானே சீரமைத்துக் கொள்வதற்கும் தயக்கம் காட்டுதல் கூடாது.         


   சுய முன்னேற்றம் என்ற ஒன்றைப் பெண்கள் கையில் எடுத்து,  தங்களுக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டால்,  பெண் அடிமைத்தனம் நீங்கி,  பெண்களின் வாழ்வு நிலை உயரும்.  பெண்கள் தங்கள் வாழ்வின் முழுவாழ்க்கை வடிவத்தையும்,  தாங்களே வடிவமைக்க வேண்டும்.
              ************


தன்னம்பிக்கை மாத இதழில் தொடராக வெளிவந்தது

தலைப்பு: வாழ்வியல் கலை

பாகங்கள்


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி