வாழ்வியல் கலை-வெற்றியின் அவசியம்

                               
வெற்றியின் அவசியம்:-

வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். வெற்றி என்றால் என்ன என்பதிலதான் குழப்பங்களுக்கு ஆட்படுகிறோம். “தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16அடி பாய வேண்டும்”  என்ற பழமொழி  கொண்டு பார்த்தோமேயானால், விரைவில் விளங்கும்.  பெற்றோரைக் காட்டிலும் மகன்/மகள்  ஒருபடி உயர்தலே வாழ்வில் முதல்நிலை வெற்றி. பெறுதல் நேற்றைய நிலையிலிருந்து இன்றைய நிலையிலான உயர்வே வெற்றி. பெற்றோர் செய்யும் அதே தொழிலை மகன் செய்ய நேர்ந்தாலும், அதில் புதுமைகளைப் புகுத்தி,  பெற்றோரைவிட, தன் தனித்திறமையை வெளிக்கொணர்தலே வெற்றி.  பெற்றோர்  சாரதியாக இருந்தால், மகன் குறைந்தபட்சம் வாகனங்களுக்கு சொந்தக்காரனாகவாவது உயர்தலே வெற்றி. வெற்றியின் மகத்துவம் படிக்கின்ற படிப்புகளில் மட்டுமல்ல.  திறமைகள் வெளிப்படும் விதத்திலும் உள்ளது.

    பலருக்கு வெற்றி ஏன் பெறவேண்டும் என்ற கேள்வி மன ஊனத்தை வலுவாக்கி விடும். குதிரையின் கடிவாளம் குதிரைக்காரனுடையது.  ஓட்டும் படகின் திசை படகோட்டியினுடையது. வெற்றி பெற்றால், உன் வாழ்வை நீ  தீர்மானிக்கலாம்.    வெற்றி பெறவில்லை எனில், பிறர் தீர்மானித்த வாழ்வை நீ வாழ வேண்டும்.  . பிறர் தீர்மானித்த வாழ்வை,  நீ வாழும் நிலை ஏற்படுதலில் இருந்து தடுக்க, நீ வெற்றி பெற்றே ஆக வேண்டும்.   

   மனதில் பொருத்தப்படும் லட்சியங்களே வெற்றிக்கான் விதைகள்.   மண்ணில் புதைந்த விதைகள் நீரின் துணைகொண்டு  விருட்சமாய் வளர்வது போல, மனதில் புதைந்த லட்சிய விதைகள் நமது முயற்சி எனும் நீரின் துணைகொண்டு விருட்சமாகி வெற்றிக்கனியினை நமக்கு காணிக்கையாக்கும்.  

   பொருள் தேடுதல் என்பது தவறான சிந்தனையாக, சிலரின் எண்ணப் பதிவுகளில் உள்ளது. “திரை கடலோடியும் திரவியம் தேடு”  என்ற, நம் முன்னோர்களின் கூற்றின்படி பொருளை ஈட்டி, குடும்ப நிலையை உயர்த்துதலும் வெற்றிக்கான யுக்தியின் பகுதிகளே. 

       உலகில் இலட்சியம் இல்லாதவன் ஒருவனே அவனே மன நலம் குன்றியவன்,  மற்ற அனைவருக்கும் லட்சியம் என்பது மட்டுமே, வாழ்வில் வெற்றி மார்க்கத்தை காண்பிக்கும்.   ஏதும் இலகுவாகக் கிடைத்தால் அதன்மீதான ஆர்வம் குறைந்தே காணப்படும்.  “எனக்கு இலட்சியம் ஏதுமில்லை”  என கூறுபவர்கள்,  அவர்களுக்கான ஆசைகளையாவது, லட்சியங்களாக வைக்க வேண்டும்.  இலட்சியம் பொருத்தப்படாத மனது,  பயம் கொள்வதோடு,  எதிர்மறை எண்ணங்களுக்கு கூடாரமாகி விடும்.
     
      எதிர்வரும் இன்னல்களை களைந்து, வெதும்பும் வேதனைகளை தூக்கிஎறிந்து, தோற்றுவிடுவோமோ என்ற எண்ணத்தை துர் சொப்பனமாக மறந்தொழித்து,  சதி செய்த விதியை மண்ணில் புதைத்து, நிதர்சனங்களைப் புரிந்து தீர்க்கமான முடிவுகளைக் கொண்டு, நேர்மறை எண்ணங்களோடு வெற்றியின் சுவை அலாதியானது என்பதை உணர்ந்து, வெற்றியை நோக்கிய நடைப்பயணத்தை துரிதமாக்குவோம்.   

     படிப்பு சரியாக வராத குழந்தைகளை பெற்றோர்களே அடுத்த வீட்டுக் குழந்தைகளோடு ஒப்பிட்டு குழந்தைகள் மனதில் மன ஊனத்தை வரவழைத்து விடுவதும் நடந்து விடுகிறது.  பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பணியென்பது எதிர்கால சந்ததியரை உருவாக்கும் நல் எண்ணத்தோடு அமைந்திடுதல் அவசியம் ஆகும்.    

      ஆசிரியர்கள்,  முதல் 10 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களை நடத்தும் விதமும், அடுத்துள்ள மாணவர்களை நடத்தும் விதத்திலும் பெரும் பாரபட்சம் காண்பித்து குழந்தைகள் மனதில் உள்ள சிந்தனைகள் எதிர்மறையாக மாற காரணமாகி விடுகின்றது

    சில பெற்றோர்கள் வெற்றி என்பது, குழந்தைகளை பள்ளிப்பருவத்தில் போட்டி போட்டுக்கொண்டு எடுக்கும் மதிப்பெண்கள் என்றே நினைத்து, உண்மையான திறமையை வெளிக்கொணர மறந்து விடுகின்றார்கள்.   படித்து முதல் மாணவனாக வெற்றி பெறுவதென்பது, அறிவையும், மனப்பாடம் செய்யும் திறனையும் பொருத்தே அமைந்து விடும்.    திறமை என்பதன் வெளிப்பாடு வேறு. படிப்பு மட்டும்தான் வெற்றி என்றே அதன் பின்னுக்கான ஓட்டம்தான்,  பொறியியல்  படிப்பின் மீதான மோகம் ஏற்பட்டு, எக்கச்சக்கமான பொறியாளர்களை உருவாக்கி வேலைதேட விட்டுள்ளோம்.    

    குழந்தைகளிடம் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்து, அவர்களை வாழ்வின் வெற்றிக் கனியைச் சுவைக்கச் செய்வதே சாலச்சிறந்தது.   ஆசைப்படுதலே தவறென்ற  எண்ணமானது வாழ்வில் உயர்வினை தடை செய்வதாக அமைந்து விடும்.  ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வேறுபாட்டை நன்குணர்தல் அவசியம்.   

   “காலம் நமக்காக  காத்திருக்காது”  என்பதை  உணர்தல் அவசியம்,  நாளை என்று தள்ளிப்போடப்படும் விஷயங்கள் உறுதியற்ற மனதிடத்தை காட்டுகிறது. உனை எண்ணி உன் பெற்றோர் கர்வம் கொள்ளும் அளவு உயர்தல் அவர்களுக்கு பேரானந்தத்தை தரும்.    


    வாழ்வில்  நினைத்த இலக்கினை அடைந்த பிறகு, அத்துடன் லட்சிய வாழ்வு முடிந்து விட்டதாக ஆனந்தம் கொண்டு முயற்சியினை நிறுத்தி விடுதல் கூடாது.  புதிய இலக்கினை நிர்ணயம் செய்து வாழ்வின் ஓட்டத்தில்  வாழ்வினை இரசித்து வாழ்ந்து கொண்டே செல்ல வேண்டும். பழைய கதைகளையும், பழைய அவமானங்களையும் பேசித்திரிவதாலும், எப்போதும் விதிகளை நொந்து கொள்வதாலும் வாழ்வில் ஏதும் மாறிவிடாது.  மேலும் மேலும், நம் மனவேதனையை கூட்டி விடும். நிகழ்காலத்தில் வாழ்தலுக்கான யுக்திகளை கற்றலே மகிழ்ச்சியினை தரும்.
      வாழ்வின் அவமானங்களை  நினைவுகளாக  அடிக்கடி  எண்ணுதல்  நிகழ்கால  வாழ்வினை  நாசமாக்கிவிடும்.  எதிர்மறை  எண்ணங்கொண்ட மனிதர்களுடனான  நட்பு,   விஷ  ஜந்துக்களுடன்   வாழ்வதற்கு  சமம். எப்போதும் கவலைகள் சூழ்ந்த வதனம், பயம் கொண்ட குணம், திடமில்லா மனம் ஆகியவை வெற்றிக்காண புதிய யுக்திகளை கண் கொண்டு காணா.   


               எனவே, சமுத்திரத்தில் இருப்பவனுக்கு  கலங்கரை விளக்கம்   வழி காட்டுவது போல,  நம் உத்தம  இலக்குகள்  நமது வாழ்வின்  வெற்றிக்கு வழி காட்டும்.  எழுகின்ற தடைகளை உடைத்தெறிந்து,  திட்டமிட்ட உழைப்பு வாழ்வின் உச்சத்தை அடைய வழி வகுக்கும்.    “அவரவர் வாழ்வு அவரவர் கையில்” அடங்க வேண்டும்.   விலங்குகள்  ஜீவன்  பிரிந்தால் உயிர் பிரிதல் நிகழ்கிறது.   மனிதனுக்கு அதே உயிர் என்பது வாழ்க்கையாகிறது.    

     தோல்வி என்பது  முடிவானதொரு முடிவல்ல.   அதுவே வெற்றியின் படிக்கட்டு என்பதை உணர்ந்து,  அதன் மூலம் கிடைத்த அனுபவத்தை பாடமாகக் கற்று, மீண்டும் முயலுதல் அவசியம்.  ஏழ்மை நிலையில்  உள்ளவர்களின் வாழ்வு, நிதித் தேவைக்கான போராட்டங்கள் நிறைந்ததாகவே இருக்கும்.  அந்நிலையில் உள்ள இளைஞர்கள் அனுதினமும், எதிர்காலம் குறித்த கனவுகளை மெய்ப்படச் செய்ய, ஏழ்மை நிலை நிந்தித்த போதும், அதன் மனத்தாக்கத்தில் இருந்து விடுபட்டு, இலட்சிய எண்ணத்தை அடைந்துவிட, உறுதி கொண்ட நெஞ்சோடு, உத்தம வாய்ப்புகளை உருவாக்கி  வெற்றிபெற   வேண்டும்.   

   இலட்சியப் பாதையில் குறுக்கொடும் தடைக் கற்களாகக் கண்டறியப்படும் விஷயங்களான -  அர்த்தமில்லா உரையாடல்கள், புறம்பேசி மகிழும் தேவையற்ற நட்பு, பொன்போன்ற காலத்தை நம்மிடமிருந்து பறித்தெடுக்கும் மின்னணு சாதனங்கள், எப்போதும் கவலை கொண்ட மனம், பொலிவிழந்த முக வாட்டம், விதியை நொந்து கொள்ளும் குணம், மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் ஏற்படும் தவறுகள், அகம்பாவ எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள், நிதர்சன புரிதலின்மை, ஆழ் மனக் குமுறல் ஆகியவை நமது வெற்றிக்கு குறுக்கே நிற்கும் தடைக் கற்கள்.  இவைகளை ஆத்ம பலம் கொண்டு உடைத்தெறிந்து, சுயம்பாக வளர்தல்,  வெற்றியை அள்ளித்தரும்.   .   


      பிரபஞ்சத்தில் அவரவருக்கென வாய்ப்புகள், “கார்மேகத்தில் மறைந் திருக்கும் மழைத்துளி போல” ஒளிந்திருக்கும் தீர்க்கமான நெஞ்சுரத்தோடு, நமது முயற்சி கொண்டு, அதனை கண்டறிந்து வெல்தல் அவசியம். நேர்மறை எண்ணங்கள் நெஞ்சில் நிறைந்து, என்னால் முடியும் என, ஆழ்மன பதிவுகளும் வெற்றிக்கான பாதையை புலப்படுத்தும். காலத்தை மாற்றி அமைக்கும் சக்தி நம் முயற்சிக்கு உண்டு.   
                                            
        **********************



Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி