வாழ்வியல் கலை- நண்பர்களை தேர்ந்தெடுத்தல்

 நண்பர்களை தேர்ந்தெடுத்தல்

  நட்பு என்பது உணர்வுகளோடு தொடர்புடைய ஒரு உறவு..    இருவரிடையேயோ குழுக்களாகவோ அமையும்.   புரிதல், அனுசரித்தல், உதவுதல், கருத்துக்களைப் பரிமாறுதல் போன்ற இனங்களில் ஒரே மாதிரியான குணங்களுடையவர் உடனான உறவுகள் நட்பாக மலருதல் இயல்பு.  இதில், பாலின மாறுபாடுகளுடன் கூட நட்புகள் அமையும். நட்பென்பது நேரடி நட்பாகவும், மறைமுக நட்பாகவும், கடித வழி நட்பு, இன்றைய முகநூல்  நட்பு என பல வகைகள் உள்ளன.


     நட்புணர்வு என்பது பிரதிபலனை எதிர்பார்க்காமல், மனதில் தியாக எண்ணங்களையும், ஆத்மார்த்தமாக உணர்வுகளையும் காட்டும் மனக்கண்ணாடியாக அமைய வேண்டும். நட்பு நம்பிக்கையை மட்டுமே அஸ்திவாரமாகக் கொண்டு உருவாகக்கூடியது. அதனால்தான், நட்புகளில் விரிசல்கள் ஏற்படும்போது,  நம்பிக்கை துரோகி என்று சொல்வதுமுண்டு.  துரோகம் என்பது,  நட்பின் விரிசலுக்கான இடமாக அமைந்து விடும். நண்பர்களை தேர்ந்தெடுத்து, நெருக்கத்திற்கான அளவை  நிர்ணயம் செய்து பழக வேண்டியது அவசியமாகும்.
  
                                            
     அனைவரிடமும் நட்பு உணர்வோடு இருத்தல் மிக அவசியம்.    ஆனால், யாரிடம் எவ்வளவு நட்புக்கான நெருக்கம் காண்பிக்கலாம் என்ற அளவுகோல் அதைவிட அவசியம்.  ஐந்து பேர் அமர்ந்து பேசும் குழுவில், ஒருவர் வெளியே சென்றால், நால்வர்,  வெளி சென்ற நபரைப்பற்றி விமர்சிப்பர்.   அந்த நால்வரில், நாம் ஒருவராக இருந்து சிரித்து மகிழ்வோம்.    ஆனால், நாம் எழுந்து சென்றால், அந்த மூவர் நம்மைப்பற்றி பேசி மகிழ்வர் என்ற எச்சரிக்கை உணர்வுடன் யோசனை இருக்க வேண்டும்.  

    ஒரு சில நட்புகள்,  அடுத்தவர்களை பயன்படுத்திக் கொள்ளும் அளவு மட்டுமே நட்புணர்வு இருக்கும்.   முன்பு ஒரு பேச்சும்,  பின்பு ஒரு பேச்சும்  அமைந்து, அந்த வார்த்தைக்கே களங்கம் கற்பிக்கும்.    
                                                            
   நீங்கள் நல்லவரா கெட்டவரா என்பது எல்லாம், நட்பின் விமர்சனங்களுக்கு அவசியமில்லை.  நல்லதாகவோ கெட்டதாகவோ எது செய்தாலும்,  எடுத்துக்கொள்பவர் முன் வைக்கும்  விமர்சனங்களில் அவரின் கருத்து வெளிப்படும்.  அது நல்லவிதமாக இருந்தால், நம்மால் ஏற்றுக்கொள்ளப்படுவதும், கெட்ட விதமாக இருந்தால், நிராகரிப்பதும், விமர்சனம் வைத்தவரை தூற்றுவதும் நட்பு வட்டாரங்களில் சகஜம்.  தவறான விமர்சனங்கள் வெளிவரின், அது விமர்சனங்களை வைப்பவரின் கருத்து என்பதனை  புரிதல் அவசியம்.

    ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் நட்பு எப்போதும் விளையாட்டை மையப்படுத்தியே இருக்கும். இதில் ஏற்படும் சிறுசிறு சண்டைகள் அடுத்த விளையாட்டு ஆரம்பமாகும் வரை நீடிக்கும்.  அதனால்தான், குழந்தைகள் சண்டையில் பெரியவர்கள் தலையிடக்கூடாது என்பர். குழந்தைகள் மனம் எதையும் சுலபமாக மன்னிக்கும் தன்மை கொண்டது.   எனவே, எந்த சண்டையும் அடுத்த விளையாட்டில் தானாக சமாதானமாகி, பழைய நட்புடன் விளையாடி மகிழ்வர்.  

   பருவ வயது குழந்தைகளின் நட்புடனான கோபதாபங்கள் சில நாட்கள் நீடிக்கும்.  பின்,  அவர்களே அந்த விரிசலை சரிசெய்து,  மீண்டும் நட்புடன் சங்கமிப்பர்.   
பெரியவர்களின் நட்பில் சமாதானத்திற்கான சூழல்கள் மிகக்குறைவே. விரிசலில் விழுந்த நட்பு காயங்களை மனதில் உறைய வைத்து, பழியுண்டர்வுடன் பகைமையை வளர்த்து விடும்.  எனவேதான், இருவரிடையேயான நட்பின் நெருக்கத்திற்கான அளவுகோல்  தீர்மானித்து நட்புக்கொள்வது அவசியமாகிறது.   

    அலுவலக ரீதியான நட்புகளுக்கு அளவுகோல் மிகவும் அவசியம். அனைவரையும் நெருக்கமான நட்பாகக் கருதி, நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வது ஆபத்தை விளைவித்து விடும்.    யாரைப்பற்றியாவது சொல்லப்படும் விமர்சனங்கள், அந்த நபரையே விரைவில் சென்றடைந்து, விரோதத்தினை ஏற்படுத்தி, இணக்கம்ற்ற சூழலை உருவாக்கி விடும்.     இதனைத் தவிர்க்கும் பொருட்டே, நெருக்கமான நட்பு யாரிடம் கொள்ளலாம் என்ற தேர்வு அவசியமாகிறது.   வைக்கப்படும் விமர்சனங்கள், குமுறல்களை வெளியிடாத நபருடனான நட்பு தொடர்தல், விரோதத்தில் இருந்து 


நம்மை காக்கும். ஓய்வு நேரங்களிலோ, குழுவாக உணவருந்தும்போதோ நட்புடன் அளவளாவும்போது, பொதுவான விமர்சனங்கள் மட்டும் வைத்தும் தனிப்பட்ட விமர்சனங்கள்,  கருத்துக்களை வெளியிடாமல் இருத்தல் நன்று.  நல்ல நண்பர்கள் அமைவது ஒரு வரமாகும்.    உன்னத தன்மை கொண்ட நட்பு பொழுது போக்கிற்காக மட்டுமல்ல சிறந்த ஆலோசகராகவும்   அமைய வேண்டும். 


    நண்பர்களுக்கிடையேயான  நட்பில் எல்லை என்பது கிடையாது.  அம்மாவிடம்   இவ்வளவு பேசவேண்டும், சகோதரனிடம் இவ்வளவு பேசவேண்டும் என்ற அளவு கோல்கள் நட்பில் இருப்பதில்லை. 

     சில தீய குழுநட்புகளினால் இளையவர்கள் மனம் பிறழ்ந்து பகடிவதைக்கு      ஆளாக்குவதும் நிகழ்ந்து விடுகிறது.   
  
    அதி தீவிர கால நிலை மாற்றங்களால் எது மாறிடினும் நட்பிற்கான இலக்கணங்களும், புனிதத்தன்மைகளும் மாறா. மனம் சஞ்சலமான சூழலிலோ, வாழ்வு இக்கட்டான காலநிலைகளிலோ,  இருதயம் பலமிழந்து போகும் நிலையிலோ, உரிய மார்க்கம் தென்படாதபோதே – உபாயத்திற்கும் மனத்தாக்கத்திலிருந்து விடுபடவும், உருவான வேதனையை போக்கவும் நட்பையே சரணாகதி அடைய மனம் விரும்பும். 

    மனம் எப்போதும் தர்ம சிந்தனைகளுடன்  நிரைந்திருக்க பவித்திர நட்பு அவசியம்.  

    நித்தமும் நிபந்தனைகளை விதித்து நிந்தனை செய்து கொண்டிருப்பவர்களுடான நட்பினை  உடன்  முடிவு கட்டுதல் நல்லது.   இல்லையெனில், விழியில் நீர்வடித்து நம்முள் பலவீனத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.   

    மனதில் நட்பிற்கான பவித்ர ஸ்தானம் வழங்கப்படின், நட்பின் புனிதம் காக்கப்படுவதோடு, புறம்பேசலுக்கெல்லம் அப்பாற்ப்பட்டு, நட்பு நம்பிக்கையுடன்   உனது நண்பன் உன் மனதை காட்டும் கண்ணாடி.  


 “உன் நண்பனைக் காட்டு, உன்னைப்பற்றி சொல்கிறேன்”  என்ற பொன்மொழி.   எனவேதான், நமது துயரினை தனதென கருதும், குழப்பங்களில் நல்வழியாதென காட்டும், சங்கடங்களைக்கூட நல் சந்தர்ப்பங்களாக மாற்றும், உருவான இன்னல்களில் இருந்து விடுபட தியாக உணர்வோடும் உள்ள நட்புகளுடன் மட்டுமே நெருக்கம் பாராட்டுதல், நன்று.  தீச்செயல் புரிபவர்களுடான நட்பும், அதர்மம் புரிபவர்களுடனான நட்பும் நம்மையும் அதர்மியாகவே  இவ்வுலகிற்கு பிரதிபலித்து விடும்.       குரோதம், நய வஞ்சகம் கொண்டவர்களுடன் நெருக்கமான நட்பு பாராட்டுதல் என்பது, கொடும் விஷ நாகத்துடன் ஓர் அறையில் வசித்தலுக்கு சமமாகும்.  


    நட்பென்பது புனிதத்தன்மை வாய்ந்தது.   இதனை மாமேதை ஒருவர் – 
உணவைப் போன்ற நட்பு,  மருந்தைப் போன்ற நட்பு, நோயைப் போன்ற நட்பு என்று 
மூன்று வகையாக பிரிக்கிறார். “உணவைப் போன்ற நட்பு” என்பது வாழும் காலம் வரை தேவையான நட்பு என்றும், “மருந்தைப்போன்ற நட்பு”  என்பது,  அவ்வப்போது தேவைக்கானது என்றும், “நோயைப் போன்ற நட்பு”  என்பது, நாம் எப்போது விலகி இருக்க வேண்டிய தேவையில்லாத நட்பு என்றும் சொல்லியிருக்கின்றார்.    

    பள்ளி கல்லூரிகளில் உண்டான நட்பென்பது, பிரதிபலன் எதிர்பாராமல் ஒவ்வொருவர் வீட்டில் உணவு பண்டங்களுடன் நட்பு இடம் மாறும்.   விளையாட்டில் விளையாடி மகிழ  இந்த நட்பு உடனான பரஸ்பர அன்பு பயன்படும்.   விட்டுக்கொடுத்தல், பரிமாறுதல், உதவுதல், பாதுகாப்பு தருதல் என்ற பல்வேறு தேவைகளுக்கு இடமாக அமையும். 


         மேடை பேச்சாளர் ஒருவர்  மேடையில் பேசியபோது நட்பிற்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம் என்ற போது, நட்பென்பது நோட்டுப்புத்தகம் போன்றது.   யார் வேண்டுமானாலும் கையொப்பம் இடலாம்.   காதல் என்பது செக்புக் போன்றது.   உரியவர் மட்டுமே  கையொப்பம் இடமுடியும் என்றார். வேறு வேறு  பாலினத்தாருடனான நட்பு காதலாகவும் மாற வாய்ப்பு உண்டு.  காதல்  கொண்டவர்கள் நட்புடன் பிரிந்து செல்வதற்கும் வாய்ப்பு உண்டு.   

       உன்னத நட்பு அமைதலே வரம்.   சிநேகம் கொண்ட மனம் நம்பிக்கையாகி ஏற்பட்ட அவமானங்கள் கவலைகளுக்கு அருமருந்தாகும்.    நீ உலகின் அதிபதியாய் இருப்பினும், ஒரு நண்பன் இல்லாவிடில், நீ ஏழைதான் என்று ஒரு அறிஞர் கூறியுள்ளார்.   

      அலுவலக நட்பு, பயண நட்பு, ஒரே அறையில் உள்ளவர்களுடனான நட்பு, கல்லூரி நட்பு, பள்ளி நட்பு, அருகில் குடியிருப்போர் நட்பு, சம விளையாட்டு வீரர்களுடன் நட்பு, ஒரே இடத்தில் உணவு உட்கொள்ளும் நட்பு,  பால்ய நட்பு, வயோதிக நட்பு  என நட்பின் எல்லை விரிந்து காணப்படும். நாட்டிற்கு எல்லையுண்டு.   நட்பிற்கு அவ்வளவாக வரையறை  நிர்ணயிக்க இயலாது. புரிந்து கொள்ளுதல், அனுசரித்தல் இவையிரண்டும் நட்பின் மாபெரும் இரட்டை குணங்கள்.  திருவள்ளுவர் நட்பினை - நட்பு, நட்பு ஆராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என,  5 அதிகாரங்களில் விளக்கியுள்ளார்.   நம்மில் துணிவை உருவாக்கும் தியாக உணர்வு கொண்ட நல்ல நட்பை நேசித்து சுவாசிப்போம்.       

                ***************** 

Comments

  1. நல்ல சுவாரஸ்யமான பதிவு👍

    ReplyDelete
  2. நல்ல சுவாரஸ்யமான பதிவு

    ReplyDelete
  3. நல்ல சுவாரஸ்யமான பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி