வாழ்வியல் கலை - சமூக வேலிகள்



சமூக வேலிகள்
                 ******
  ஆண் பெண்  இருபாலர்களுக்குமென சமூக வேலிகளின் தன்மையில், வேறு வேறு கோணங்களில் முன்வைக்கப்படும் காரணங்களுடன் காணுதல் அவசியம்.

    பெண்களுக்கு வெளிச்சூழல்களில் சுற்றித் திரிதலில் உள்ள கட்டுப்பாடு, ஆண்களுக்கு இருப்பதில்லை என்பதன் நோக்கம் – பெண்களின்  உடல் ரீதியான தாக்குதலினால் ஏற்படும் எதிர் விளைவுகளுக்கான,  பாதுகாப்பு கவசமாகவும் கருதலாம்.  மேலும், கற்பு எனும் நெறி,  இரு பாலருக்கும் என சொல்லப்பட்டுக் கொண்டிருந்தாலும், அதன் உரிய நிதர்சனத்தை புரிந்து பார்த்தோமானால், ஒரு பாலிருக்கான பாதுகாப்பின் வளையமாகவும் கருதப்படுகிறது.    இதனையே, எதிர் கோணத்தில் பார்த்தால்,  பதின் பருவ  வயதில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களில் உந்தப்பட்டு,  தவறுகளுக்கு ஆட்பட்டு விடும் பெண் மகவுகளுக்கும்,  அல்லது பாலியல் துன்பங்களுக்கு ஆளாகிவிடும் சிறுமிகளின் ஆழ் நெஞ்சில்,  தாம் வாழ தகுதியற்றவர்களோ,  என ஆழ்மன பாரத்துடன், மனம் எப்போதும் சதுராடிக்கொண்டே இருக்கும் நிலைக்கு தள்ளப்படுவதும் நிதர்சனமே.

   
    விதவை, வாழா வெட்டி, மலடி என்ற வார்த்தையின் தாக்கம், ஆண்களை குறிப்பதாக இருப்பதில்லை.    நமது, ஆழ்ந்த பாரம்பரிய பண்பாட்டில் நீக்க வேண்டிய கரும்புள்ளிகளாகவே, இவைகள் அமைந்து விடுகிறது. இவ்வாறான நிலையில் உள்ளோர்களின் வலிகளும், அவர்களது சமூக புறக்கணிப்புகளும், நாம் இன்னும் மாற்றம் செய்யாமல், இவ்வார்த்தைகளை,  தலையில் தூக்கி வைத்துக்கொண்டு சுமப்பது,  உத்தம காரியம் ஆகா. 

    
      வேறு கோணத்தில் இதனை பார்த்தோமானால், நசுக்கப்படும் வாழ்விலும், இன்னல்களை சகித்து,  நீ கட்டாயம் வாழ்ந்து விட வேண்டும்.   மாறாக நிகழ்ந்தால், சமூகத்தால் உன்னை  விதவை, வாழா வெட்டி என முத்திரைகள் இட்டு அவமதிப்போம் என்ற பயமுறுத்தும் உள் மறை பொருள் கொண்டதாகவே கருதும் நிலையுள்ளது.       
 
     கணவனை இழந்த பெண்ணிற்கு, சட்டத்தில் மறுமணம் வழிவகை செய்யப்பட்டிருப்பினும், அவை இன்றும்,  அலமாரியில்  அடுக்கி வைக்கப்பட்ட, பயன்படா பொருளாகவே உள்ளது.  கற்பு நெறியின் தாக்கம் உள்ளதாலும், இது அலங்காரப் பொருளாக அமைய காரணமாகிறது. பெண்ணுக்கு ஆணோ, ஆணுக்கு பெண்ணோ,  துணையாக  வாழ்வில் தேவை என்ற  இயற்கை நியதியை, ஒரு பாலாருக்கு இலகுவாகவும், மற்றொரு  பாலாருக்கு கடினமானதாகவும் இருப்பது சமூக குறைபாடே.  இதனால், வகுக்கப்பட்ட நியதிகளை உடைத்தெறிந்து, தவறுகளுக்கு வழிகோலி விடக்கூடும் என்ற நிதர்சனப் புரிதல் அவசியம்.         


    ஒரு பெண்ணோ ஆணோ திருமண பந்தத்திலிருந்து விடுபட்டவராக இருப்பின், அவ்விரு பாலாரில்,  ஒரு பாலார் விரைவில் அடுத்த வாழ்வை அமைத்துக் கொள்வதில் சிக்கலின்றி நிறைவேறுகிறது.  இதில், அடுத்த பாலாருக்கும் இந்த இனத்தினை சுலபமாக்கப்படவில்லை என்பதை உணராமல், குற்ற உணர்வின்றி இருப்பதும், மன ஊனத்தின் பகுதியே. இதற்கான காரணங்களை கண்டறிந்து,  களையும் முயற்சியில் ஈடுபட்டால், அடுத்த  தலைமுறைகளாவது,  மன ரணமின்றி, வாழ்வை இனிமையாக வாழ வழிவகை செய்யும். கணவனின் இறப்பு என்பது மனைவியின் பூ, பொட்டு  என,  அவள் சிறு வயதில் இருந்து அனுபவித்து வந்த சுகங்களையும் சேர்த்து எடுப்பதுதான் பாரம்பரியத்தின் பகுதி என்றால், அப்பக்கங்களை கிழித்தெறிந்து புதிய பாரம்பரியத்தை உருவாக்குதல், எதிர்கால சந்ததியருக்கு நன்று. 

 
      இந்த மனித இனம் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் அடுத்த சந்ததியினரை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கின்றது.   இனம் தழைக்க   உருவமளிக்கும் ஆன்மா மட்டும்,  நரகத்தின் மறுவடிவமாக பூலோக வாழ்வும்  அமைந்திருப்பதை பார்த்து, நிபந்தனை விதித்து, நிந்தித்து வருவது தர்மம் ஆகா. தராசை சமன் செய்தல்தான் நியதியாகும்.  பொலிவிழந்த நங்கைகளின் வாழ்விலும், பொலிவு பெற செய்வதுதான் தர்மம் ஆகும்.  
  

       அவர்கள் அவ்வாறான வாழ்வினை ஏற்படுத்திக்கொள்ள -   நாங்கள் மட்டும் தடை விதிக்கவில்லையே?  என்று  கூறுவது,  முறையான தீர்வாகா. வசைபாடும் அவதூறான சொற்களினால், ஊர் வாய்க்குப் பயந்து,  தாக்குறாமல் இருப்பதற்கே எதிர்கால முடிவுகளுக்கு ஆட்படாமல் இருந்து விடுதல்  நிகழ்கிறது. ஒரு பாலரை காக்க  ஏற்படுத்தப்பட்ட சமூக வேலிகள், அவசியமானதாக கருதினாலும், அவர்களின் வாழ்விற்கான தடைகளாக உள்ளதையாவது எடுத்தெறிய துணிதல் நன்று. 


      வயோதிகப் பருவம் எய்தும் சிலருக்கு, இரண்டொரு வார்த்தை பேசக்கூட நாதியற்ற சூழல் உருவாகிவிடுதலும், நமது சமூக வேலிகளும் முக்கிய காரணமாகி விடுவது மறுப்பதற்கில்லை. இதனால், வயோதிகம் கண்டு அச்சமுறும்  நிலையும் தொடர்கிறது. முதியோர் இல்லங்களில் நமது உறவுகள் உண்மையில் மகிழ்வுடன் வாழ்கின்றனரா? என்றால், முகத்தில் புன்னகை புரிந்து, உள்மன ரணத்தை   மறைத்து விடுகின்றனர் என்பதே நிதர்சனம். ஒரு வகையில், இந்த சமூக வேலிகளும் காரணம் என்பதை சமர்ப்பண உணர்வோடு பார்த்தல் அவசியம். 


      பாலியல் தொந்தரவுகளுக்கு ஆட்படும் பெண் மகவுகளின் நல்எதிர் காலத்தை, இந்த வேலிகள் தடை செய்கின்றதோ? என்பதை,  விசால பார்வை கொண்டு  பார்த்தல் அவசியம்.  பாலியல் துன்பத்திற்கு அகப்படும் பெண் மகவு மீது, கருணை கொள்கிறோம். இது ஏன் ஏற்படுகிறது? என்பதில்,  உளவியல் காரணங்களை கண்டறிந்து, களைய முற்படுதல் நன்று.  இதனை, உளவியல் ரீதியாக உள்ள அறிஞர்களிடம் கேட்டபோது, இவ்வகை பதில் ஆச்சரியம் அளித்தது. உளவியலாளர்கள் அவர்களை குற்றவாளிகளாக பார்க்கவில்லை.  எரிகின்ற அனலை பதில், சமூக/சட்ட வேலிகளின் தாக்கம் தெரிகிறது.    
 
      தடம் மாறும் நபர்கள்  வாலிப வயதுடையவரில் தொடங்கி, வயோதிகத்தில் உள்ளவர்களும் அதில் அடக்கம்.   இதில் இருந்து நமது சிசுக்கள், பதின் பருவத்தினர், இளவய யுவதிகள்,  முதிர் ஸ்ரீக்கள் ஆகியவர்களை,  எந்த சமூக/சட்ட வேலியிட்டு காக்கப் போகிறோம்? ஆழ் மனதில், இவைகள் மாபாவச் செயல் என்று உணர்த்தப் படாதவரை, இவைகள் தொடரும். இவ்வித ஆழ்மன மாற்றங்களை எப்படி அனைவருக்கும் கற்பித்து, எதிர்கால சந்ததிகளை, பாதுகாப்பு உள்ள சமூக வேலிக்குள் கொண்டு வரப்போகிறோம் என்ற கேள்வி, பல காலமாக கேள்வியாக உள்ளது என்பது அனைவரும் நாண வேண்டிய விஷயமே.      
      மறுமணம்  செய்து கொள்பவர்களை, கொலைக் குற்றவாளிகள் போல் பார்ப்பதை விடுத்து, ஏற்படும் பாலியல் துர் கர்மங்களிலிருந்து, நெருக்கமான புற சூழலில் வாழும் இனக்கமான உறவுகளால்கூட,  எதிர்கால சந்ததியினரை காக்க வழி தேடுதல் அதி உத்தமம்.                 
      நதிகளனைத்தும் வெவ்வேறு  இடங்களில் தோன்றினாலும்,  சென்றடையும் இடம் கடலே என்பது போல, இனம், மதம் ஆகியவைகள் வெவ்வேறாக இருந்தாலும், எல்லாம் கடைசியில் இறை நிலையையே மனிதர்கள் அடைவதற்கான மார்க்கங்களே.   இதனை மறந்து, யாருடைய இறை பெரியவன்? என சண்டையிடும் காலமாக மாறிவிட்டது என்பதையும் ஏற்கத்தான் வேண்டும். பகுத்தறியும் குணத்தைக் கொண்டு,  அவரவர்   மதத்தினை அவரவர் பின்பற்றி,  மற்றவர் மத உணர்வுகளை மதித்து,  மனித நேயத்தோடு வாழ்தல் நன்று. மனித இனத்திற்காக போடப்பட்ட வேலிகள் அனைத்தும், மனித இனத்தை காப்பதற்காகவே அமைய வேண்டும்.   எவ்வித வேலி,  மனித இன காத்தலுக்கு அல்லாமல், மனித இனத்தை நசுக்கும்படி மாறியுள்ளதோ, அதனை பிடுங்கி எடுத்து, சிறந்த புத்தம் புதுவாழ்வு என்பது, மனித இனம்  அனைத்தும் சக மனித நேசத்துடன் பூரித்த  மகிழ்வுடன் வாழ,  வழிவகை செய்ய வேண்டும்.  

      இந்த சமூக வேலிகளால் சிக்குறுபவர்களை, நாம் எவ்வாறு காக்கப் போகிறோம்?  என்பதன் தெளிவே, நம் எதிர்கால சந்ததியினர்,  சிரமமின்றி தம் வாழ்வை வாழ,  வழிவகை செய்யும். எதிர்கால பெண் மகவுகள், பாலியல் வன்முறைகள் நிகழாமல் காப்பது எவ்வாறு? என்பதையும்,வன்மத்தில் ஈடுபடுவது தீச்செயல் என்பதை,  எவ்வாறு கற்பிக்கப் போகிறோம்? இச்செயல், கொடும் நயவஞ்சக குணம், எதிர் பாலினத்தினரை சீண்டி, நிர்மூலமாக்க முயல்வது,  தேகத்தை மட்டும் வளர்த்து, புத்தி வளராமல், இச்சைகளை அடக்கத் தெரியாமல், இவ்வகை ஈனச்செயல்களுக்கு  வழிவகை செய்வதில் இருந்து, நம் சமூக/சட்ட வேலிகள் காக்கின்றதா? என்பது கேள்விக்குறியே.
 
    சட்டத்தின் மூலம், இரு பாலருக்கும் சம உரிமை வழங்குகிறோம் என்று,  ஏட்டுச் சுரக்காயாய், கிராமப் புறத்தினருக்கு எட்டாக் கனியாகவே அமைந்துள்ளது.  .     இழைக்கப்பட்ட பாவம்  எதுவென்று அறியாமலேயே, உச்ச அடிமைத் தன்மையையே, புனித வாழ்வு என கருதும் மன நிலைகளையே,   இச் சமூக வேலிகளால் உருவாக்க முடிந்துள்ளதும் உண்மையே.  

    நம் தமிழ் மரபென்பது, அரசனே தவறென்றாலும், தண்டனை பெற வேண்டும் என்ற தைரிய எடுத்துரைத்தலை, காவியங்கள் மூலம் புகட்டியுள்ளது.   கிராமங்களில் வாழும் மனித இனம்,  நகர வாழ்வில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் சட்டத்தின் பாதுகாப்பு, இன்னும் சென்றடையாத காரணத்தினாலேயே, மனத் தாக்கத்திலிருந்து  விடுபட உயிரை மாய்க்கும் நிலைக்கு தள்ளப் பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.    

   சமூக வேலிகள் என்பது, மனித சமுதாயத்தை காக்கும் அளவு, விசால பார்வை கொண்டு அமைத்தல், எதிர்கால சந்ததியினர் அற நெறியுடன் வாழவும், நடைபெறும் தவறுகள், என் குடும்பத்தினரை இன்னும் ஆட்கொள்ளவில்லை என்ற பெருமிதத்தோடு, படுகுழியில் இருக்கும், நரக வாழ்வை அனுதினமும் அனுசரிக்கும் கன்னிகைகளின் நிலையை உணராமல் இருப்பது, தனது எதிர்கால சந்ததியினர், இவ்வின்னலில் ஏற்படாது என யாரும் சத்தியம் செய்து கொடுத்துள்ளனரா? என்ற கேள்வியை, அவரவர், அவரவரை நோக்கி கேட்டுக் கொள்ள வேண்டும்.  எதிர்கால சந்ததியினர் இரு பாலருக்கும்,  வாழ்வைப் பற்றிய புரிதலையும், நெறி பிறழா நிலைகளையும் கற்பித்தலுக்கு உண்டான மார்க்கங்களை தேடுதல் அவசியம்.                

       ********************* 



Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி