வாழ்வியல் கலை-குழந்தைகளுடன் பழகுதல்

                                                      
குழந்தைகளுடன் பழகுதல்

      குழந்தைகள்  நமது லட்சியங்களை நிறைவேற்ற, நமக்குப் பிறந்தவர்கள் என்ற தவறான எண்ணமே, அவர்களின் மீதான பல கனவுகளின் திணிப்பு உருவாகி விடுகிறது.  அவர்கள், நம் மூலம் இப்பூவுலகைக் காண வந்தவர்கள்.  நமது இயலாமையால் வாழ்வில் நிறைவேறாக் கனவுகளை அவர்களின்  தலைமீது பாரமாக இறக்கி வைக்க நினைப்பதன் தாத்பரியம் உணர்தல் அதிஉத்தமம்.      
   
     பள்ளிப்பருவத்தில் குழந்தைகள் கற்க வேண்டிய மனிதம், அறம், சுயமரியாதை, நீதி ஆகியவை  போதிக்கப்படுவது நடைபெறுகிறதா? என்றால், அது காலத்தின் வேகத்தால் பல பெற்றோரின் கவனத்தில் இருந்து வெகு தொலைவில் சென்றுவிட்ட ஒன்றாகவே அமைந்து விடுகிறது.  விட்டுக் கொடுத்தல், பகிர்ந்து வாழ்தல், மன்னித்தல், மறத்தல்  ஆகிய பண்புகளை குழந்தைகளுக்கு பெற்றோர் ஊட்டி விட வேண்டும். பள்ளிகளில் பல மொழிகள், பல பாடங்கள் கற்றலின் சுமை கூடியுள்ள சூழ்நிலையில், கட்டாயம் கற்பிக்க வேண்டியவையாக உள்ளதை, பெற்றோர் தனிக்கவனம் செலுத்தி கற்பித்தல் அவர்களின் வாழ்வை  ஆனந்தமாக்கும்.  
   
     வெற்றியும், தோல்வியும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை, சிறு வயதில் கற்பித்தல் அவசியம்.   சில குழந்தைகள் பள்ளிப் பாடங்களின் மதிப்பெண் தொடர்பான தோல்விக்குக்கூட, தற்கொலை போன்ற மிக விபரீத முடிவுகளுக்கு தள்ளப்பட்டு, அந்த குழந்தைகளின் பெற்றோர், தங்களது வாழ்நாள் முழுவதும் கண்ணீர் வடித்து  வேதனையின் உச்சத்தையே அனுபவிக்கும்படி நேர்ந்து விடுகிறது.   சூழலுக்கேற்ப வாழ்தலின் நிலைகளையும், தோல்வியையும் உறுதிகொண்ட நெஞ்சோடு அணுகும் கலையை கற்பித்தல் அவசியமாகிறது.  தோல்வியை அவமானமாக எண்ணுதல் வாழ்வை நரகமாக்கும்.       

      சில இடங்களில்,  பள்ளியில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மணிகள் கூட எதிர்கால தோல்வி பயத்தில், தற்கொலையை சுவீகரிப்பது,அந்தக் குழந்தைகளின் மனம் தோல்வியைத் தாங்கும் திறனற்றிருப்பதேயாகும்.  தோல்வியைத் தாங்கும் மன நிலையை உருவாக்குதல் என்பதும், அக்குழந்தைகளின் வாழ்வில்,  எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை வளர்த்தலும் அக்குழந்தையின் எதிர்காலம் சிறக்க வழிவகை செய்யும்.  
                                                                             
   . குழந்தைகளுக்கு சூழலுக்கேற்ப வாழப்பழகுதலும்,  பகிர்ந்தளிக்கும் குணத்தினை சொல்லித் தருதலைவிட, குழந்தைகளே ஒரு பொருளை பகிர்ந்தளித்துப் பழக்குதல் நன்று. அடம் பிடித்து கேட்கும் எதையும் வாங்கித் தந்து, குழந்தைகளுக்கு பெற்றோர் அடிமையாகி விடுதலும் நடந்து விடுகிறது. எப்போதுமே சாதகமான அனுகூல சூழலையை உருவாக்கிக் கொடுத்துக்கொண்டே இருப்பின், அவர்கள் சரீரத்தை மட்டுமே வளர்த்து, தெளிவற்ற புத்தியுடனான அணுகுமுறையை மட்டுமே அவர்களின் மனம் வியாபித்திருக்கச் செய்து விடும்.  அடம் பிடித்து கேட்கும்போது  வாங்க இயலாத பொருட்கள், பெற்றோர் வாங்கித்தர மாட்டார்கள் என்பதும், குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பாடமே.                           


         சில வீடுகளில் குழந்தைகளின் கருத்துகள், எண்ணங்கள், ஆசைகள் போன்றவற்றிற்கு காது கொடுத்து கேட்கக்கூட,  பெற்றோருக்கு நேரமோ, கவனமோ முக்கியத்துவமோ இருப்பதில்லை.  இதனால், அவர்களின் நியாயமான கனவுகள் கூட, கருகி விடுவதற்கு பெற்றோர்களே காரணமாகி விடுவதும் நடந்து விடுகிறது. அடுத்தவர்களுக்கு தொல்லை தராமல் வாழ்தலின் நன்மைகளை,  குழந்தைகள் சிறு வயதில் இருந்தே கற்றல் நன்று. குறை கூறுதல்,  புறம் பேசுதல் போன்றவை வாழ்வில் எச்சமயங்களிலும் நன்மை அளிக்காது என்பதும், அடுத்தவர்களுக்கு  முடிந்த அளவு உதவி செய்து, அடுத்தவர்களின் முகத்தில் காணும் மகிழ்ச்சியைக் கண்டு மகிழ,  சொல்லித்தருதல் மிக அவசியம்.        

         சின்னசின்ன விஷயங்களில் கூட, குழந்தைகள் நம்மைக் கண்காணித்து, அதிலிருந்தே பாடம் கற்கின்றனர்.  அதனால், எதை அவர்களுக்கு கற்பிக்க  வேண்டுமோ, அதையே நாம் வாழ்ந்து காட்டுதல்,  அவர்கள் நல்லதைக் கற்றலுக்கு வழி வகுக்கும் என்ற நிதர்சனப் புரிதல் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இருத்தல் உத்தமம்.   .       
         பள்ளிப் பாடங்களில் அனைத்துக் குழந்தைகளாலும், முதல் மதிப்பெண் எடுத்துவிட முடியாது என்ற புரிதல், பெற்றோருக்கு இருத்தல் அவசியம்.   அவர்களின் திறமைகளை, பெற்றோர் மட்டுமே கண்டறிய இயலும்.  அதனால், அவர்களுக்கு அறிவியலில் நாட்டம் இருக்கிறதா, கணிதத்தில் நாட்டம் இருக்கிறதா, விளையாட்டில் நாட்டம் இருக்கின்றதா  என்பதைக் கண்டுணர்தல் அவசியம்.   அதில், அவர்களுக்கு அவர்களின் அறிவினை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் தனித்தன்மையை வெளிக்கொணர்தல், அவர்கள் விருப்பப்பட்ட துறையில் மிளிர வழி வகை செய்யும். 


 இன்றைய அளவில் விளையாட்டிற்கு முக்கியத்துவமற்ற நிலையில்தான் பல குழந்தைகள் தனது சுவாசமாகக் கருதும் விளையாட்டுகளை தொடர முடியாமல் உருப்பெற்ற மனக்கோட்டை தகர்த்தெறியப்பட்டு, அவர்களின் ஆழ்மனப்பதிவில்  ஏக்கங்கள் குடிகொண்டு விடுகிறது.    பல விளையாட்டு வீரர்கள் உலக பிரசித்து பெற்ற வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள் என்றால், அவர்களின் பெற்றோர்களின் புரிதல் உணர்வும் காரணமாகிறது.   
     

அதைவிடுத்து, பெற்றோர் விரும்பும் துறையினை தேர்வு செய்து,  அவர்கள் மீது திணித்தல், அவர்கள் பிற்காலத்தில் நிறைவேறா கனவுகளின் வியாபிப்பால் மன நிறைவு அளிக்காமல், கடமைக்காக பணியாற்றுவது போல அமைந்து, அவர்களுக்கும்  மனரணம் ஏற்படக் காரணமாகி விடும்.   அவர்களின் ஆழ்மனதில் உள்ள கனவுகள், ஆசைகள் எது என காணுதல் ந்மது கடமையே. அது வெற்றி பெறவும் அவர்கள் முயற்சி மேற்கொள்தலில், பெற்றோரின் பங்கு இருத்தல் அவசியம். சில வீடுகளில் குழந்தைகளை விளையாடுதலில் கூட அனுமதிக்கப்படுவது இல்லை. அந்தக் குழந்தைகளின் ஆழ் மனதில்,   விளையாட்டில் சிறந்த வீரனாக வரவேண்டும் என்ற கனவு கலைந்தோட பெற்றோர், சுற்றமுமே காரணமாகி விடுகிறார்கள்.    
 

       சில இடங்களில் குழந்தைகளைப் பற்றிய குறைகளை  சொந்தங்கள் மற்றும் சினேகங்களுக்கும் முன்பேயே, பெற்றோர் போட்டு உடைத்து விடுவர்.   இது, குழந்தைகள் மனதில் பெற்றோர் மீதுள்ள நம்பிக்கையை தளர்த்தி விடுவதோடு, முழு மனதோடு அவர்களின் மனதில் உள்ளதை வெளிப்படுத்துவதும் தடை செய்யப்படுகிறது.  

         குழந்தைகளை வளர்க்கும்போது, பெறோர்கள் இரு பாலின குழந்தைகளையும் சமமாக நடத்துதல், வருங்காலத்தில் அவர்கள் அடிமைத் தனத்துடன் வாழ்தலை தடுக்க இயலும்.   ஒரு பாலின குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து விடும் இடங்களில் வளரும் குழந்தைகள்  வளர்ந்த பிறகு,  தனது எதிர்பாலினத்தவர்,  தனக்கு அடிமைகள் போல நடத்துதல், நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.   குழந்தைகளின் மன எண்ண ஆழத்தை அறிந்து கொள்ள, அவர்களுடன் நெருங்கிப் பழகுதல் அவசியம். அதீத  ஆளுமைத்தனம், அவர்களுடன் நெருங்க விடாமல், நம்மை விட்டு அவர்கள் மன அளவில் விலகி நிற்கச் செய்வதைத் தடுக்க, அவர்களுடன் நட்புடனான பாசத்தையும், அன்பையும் செலுத்த வேண்டும்.

      அவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும்போது, அதனை அவர்களே களையும் கலையை அவர்கள் கற்க வேண்டும். முடிவெடுக்கும் திறனை வளர்த்தல்தான், பிற்காலத்தில் அவர்கள் பிரச்சனைகளை சவால்களாக கருதும் மனநிலை வெளிப்படும்.  
நடப்பவை எல்லாம் விதியின் விளையாட்டு என வாழ்வை நொந்து கொள்ளும் நிலை தவிர்க்கப்படும்.  இக்கட்டான சூழ்நிலைகளை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதில்தான், அதற்கான உரிய தீர்வு ஒளிந்திருக்கிறது என்பதின் சூட்சமம் குழந்தைகளிடம் பழகும்போதே போதிக்கப்பட வேண்டும்.        


      எப்போதும், அவர்கள் பிரச்சனைகளுக்கு, நாமே முடிவு எடுத்துக் கொண்டிருப்பின், பருவ வயதை அடைந்த பிறகும், பிரச்சனைகள் ஏற்படும்போது, பெற்றோரையோ, பிறரையோ தேடிச்செல்லும் நிலைக்கு தள்ளப்படுவர்.   சத்ருக்களை உருவாக்காமல் வாழ்தலையும், எதிர்காலத்தில் விளையவிருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய நுண்ணறிவும்  அவர்களுக்கு வளர்ந்து கொண்டே வர வேண்டும்.   அப்போதுதான் அதனை வெல்லும் கலையை கற்று, வாழ்வை தனது கைக்குள் அடக்கும் வித்தையை  அறிந்து கொள்வர்.                  


        குழந்தைகளுடன் பழகும்போதே, நம் செய்கைகளிலேயே அவர்கள் கற்றலுக்கான பாடம் அமைந்துவிட வேண்டும்.   ஒவ்வொரு முறையும் பிரச்சனைகள் ஏற்படும்போது, அதை நாம் சமாளிக்கும் விதத்திலிருந்தே,  அவர்கள் பாடம் கற்பர்.  சில சம்யங்களில் நம் பயமும், கோழைத்தனமும் அவர்கள்முன் வெளிப்பட்டால், அவர்கள் அதனையும் பயத்துடன் கற்பர் என்ற விபரீதத்தை உணர்தல் அவசியம். தைரியமும், தன்னம்பிக்கையும்  அவர்களுக்கு, பெற்றோர்களால் போதிக்க வேண்டிய  மாபெரும் இரட்டை பகுதிகள்.   இதனை, இளவயதில் இருந்தே கற்பித்தலும், வாழ்ந்து காட்டலும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கு மிக நல்லது.    நம் சொல்லுக்கும், செயலுக்கும்  வேறுபாடு இருப்பின், நம்மை நோக்கியிருக்கும் குழந்தைகள், அதனை எதிர்மறையாக கற்றுக்கொள்வர் என்பதில் கவனம் கொள்ள வேண்டும். குழந்தைகள், அவர்களின் எதிர்கால லட்சியங்களை சரியாகப் பொருத்துவதில், நாம் உதவிபுரியவும் அதே நேரத்தில், அவர்கள் மீது நம்மால் நிறைவேற்ற இயலாத லட்சியங்களின்  திணிப்பு நிகழ்ந்து விடாமல் இருத்தல்  அதைவிட நன்று.  
 

        ஆசிரியர்களும், பெற்றோரும் எதிர்கால சந்ததியினராக குழந்தைகளை வளர்த்தலிலும், கற்பித்தலிலும் சிறப்பான கவனம் கொள்தல் அவசியம்.  பள்ளிப் பாடத்தில் மதிப்பெண் குறையும் மாணவ மாணவிகளிடம் ஒளிந்திருக்கும் தனித்திறமைகளை வெளிக்கொணர்தலை விடுத்து, அவர்கள் மதிப்பெண் எடுக்காததால், இழிசொல் கூறி, வாழ தகுதியற்றவர்கள் என, அவர்களின் மனதில் எதிர்மறை பதிவுகளை ஏற்படுத்தி விடாமல் இருத்தல் அவசியம்.  

சில இல்லங்களில் ஒருவரை ஒருவர் இழிசொல் கூறி, சண்டியிட்டுக் கொண்டிருக்கும் சூழலில் வளரும்  குழந்தைகள் இழிசொல் பிரயோகத்தினை ஆழ்ந்து கற்றும், கர்வம் கொண்ட குணத்துடன், ஆணவம் கொண்ட மனத்துடன் கற்பித்தவரிடமே அதனை தாக்கும் ஆஸ்திரமாக பயன்படுத்துவர்.

        குழந்தைகளுக்கு உரிய அளவு சுதந்திரத்தினை வழங்கி, உரிய நல் முடிவுகளை அவர்களே எடுக்க செய்வது, அவர்களின் எதிர்காலத்திற்கு நன்று. மேலும், அவர்கள்மீது உள்ள ஆளுமை, அவர்களை நசுக்கும் அளவிற்கல்லாமல் இருப்பது நலம்.  அவர்கள் வளர்ந்து பருவ வயதை அடையும்போது, அவர்கள் தனியாக எந்தப் பிரச்சனையையும் கையாளும் திறன் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து, அவர்களுடன் நமக்குள்ள கட்டுப்பாடுகள் ஆளுமைகளை தளர்த்தி,  “தோளுக்கு மிஞ்சினால் தோழன்” என்ற பொன்மொழியில் சொல்லப்பட்டுள்ள தோழமையை, அவர்களுடன் வளர்த்தல் அவசியம்.  

        பெண்குழந்தைகள் அழகோவியமாக வலம் வருதலை விடுத்து, சாதனைச் செல்விகளாக உருவெடுக்க துணை புரிய வேண்டும்.   வாழ்வை சுமையாக்கும் சங்கட நிலைகளை அழித்து,  உரிய நெஞ்சுரத்தோடு திட்டமிட்டு உழைத்து, திறமைக்கான  அங்கீகாரத்துடன் சுய முன்னேற்றம் பெற்று சுய கவுரவத்துடன் வாழ கற்றலுக்கான சூழலை அமைத்துத் தரப்பட வேண்டும். குழந்தைகள் பருவ வயதினை அடையும்போது, மன முதிர்ச்சி மிக அவசியம். அதுவே அவர்களை நல்வழிப்படுத்துவதோடு, உரிய நல்முடிவுகளை  உரிய நேரத்தில் எடுப்பதற்கும்  உதவும்.   
                                                                       
      மனமுதிர்ச்சி என்பது,  அவர்களுக்கு எது அவசியம், எது நல்லது, எது நன்மை பயக்கும், எது கவர்ச்சியானது, எது மன்னிக்கக்கூடியது, எது தவிர்க்க வேண்டியது, எது நிம்மதி தரக்கூடியது, யார் நம்பிக்கைக்கு உரியவர், யார் எந்த அளவுக்கு  நட்புக்கொள்ளக் கூடியவர் என அறிவினைத் தந்து,  சிறப்புறச் செய்யும். மனமுதிர்ச்சியை ஏற்படுத்துவது அவர்கள் வாழ்வில் சிறந்த முடிவுகளை எடுக்க தெரிந்து கொள்ளவும், நிதானமாக அவற்றை எதிர்கொண்டு வெல்லவும் மன தைரியத்தை அளிக்கும்.   அதோடல்லாது, சகமனித நேசம் கொண்டு அனைவரையும்  அணுகவும் வாய்ப்பளிக்கும்.    
                                                                           
                                          
  “உதிர்த்த வார்த்தைகளுக்கு நாம் அடிமை, உதிர்க்காத வார்த்தைகள்  நமக்கு அடிமை” என்ற பொன்மொழியோடு, எப்போதும் இன்சொல் கூறி,  எப்போதும் முகத்தில்  எதிர்பார்ப்பில்லாத புன்னகையுடன் சிநேகம் குடிகொள்ளவும், எதிர் வரும் இன்னல்களைக் கண்டு அஞ்சாமல், உறுதி கொண்ட நெஞ்சோடு அதனை அணுகவும்  சமூக நீதியுடன் வாழ வழிவகுக்கும்.      


   பழைய அவமான நினைவுகளை தூக்கிச் சுமக்கும்   குணம், ஒருவரின்  சந்தோஷத்தைப் பறித்தெடுத்துக்கொண்டே இருக்கும் என்பதையும், பொறாமை குடிகொண்டிருக்கும் மனம் வெற்றிக்கான புதிய யுக்திகளை தேடா.   அதனால் குழந்தைகளிடம் பழகும்போது நாம் அவர்களிடம் பொறாமைக்கான வித்தினை விதைத்து விடாமலும் அவர்களிடம்  அவ்வகை குணத்திற்கான அறிகுறி தென்பட்டால் அதனை வேறுடன் களைதல் அவசியம்.   


 மனத்தூய்மை என்பது சந்தோஷம் எனும் ஊற்று பிறக்குமிடமென்பதையும் கற்பித்தல் நன்று.   முடிந்த அளவுக்கு யாருக்கும்   தொந்தரவு தராது வாழும் நிலையையும், நம்மை நோக்கி வரும் உறவுகளை நேசித்து, நம்மை விட்டுச் செல்லும் உறவுகளை யாசிக்காமலும் இருப்பதும் நன்று.   நம்மை புரிந்து கொண்டவர்கள் எப்போதும்  நம்மை நேசிப்பர்.   அடுத்தவர்களின்  கண்ணீருக்குக் காரணமாகாமல் வாழ்தலே வாழ்வியல் கலையின் மாண்பு.     
                                                             
     நமது குழந்தைகள் மற்ற  குழந்தைகளுடன் இருக்கும் இடங்களில், அந்தக் குழந்தைகளுக்கு இடையில் பரஸ்பர அன்பும், பகிர்ந்தளித்தலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தலும் சொல்லித்தரப்பட வேண்டும். எப்போதும் முகத்தில் சினேகம் குடிகொண்டு மற்றவருடன் பழகுதலும், அன்பை வெல்லும் அஸ்திரம் அகிலத்தில் இல்லை என்பதையும் குழந்தைகள் கற்றுக்கொள்வது அவர்களின் வாழ்வனைத்திலும்  ஒற்றுமையாக வாழ வழி வகுக்கும்.   அவர்கள் சுயமரியாதையுடனும், சமூக நீதிகளுடனும் வாழ்வை அணுகுதல் கலையை அவர்களுக்கு சிறு பிராயத்திலிருந்தே,  சூழலுக்கேற்ப போதித்து,  அவர்களை  சிறந்த  சான்றோராக்குதல்  நமது  கடமையே.  
 
           ********************
தன்னம்பிக்கை மாத இதழில் தொடராக வெளிவந்தது

தலைப்பு: வாழ்வியல் கலை

பாகங்கள்
5)குழந்தைகளுடன் பழகுதல்



     

   
                           
         

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி