வாழ்வியல் கலை - மனசாட்சி ஒரு பார்வை

மனசாட்சி ஒரு பார்வை                                                                  

    உருவமில்லா  ஒரு அச்சுறுத்தும் மாயக்குரல், நாம் வளர்ந்த சூழ்நிலை, மதம், இனம், காலம், கலாச்சாரம் இதை வைத்து,  எது சரி. எது தவறு என்று நமக்குள், ஒரு அட்டவணை பதிந்திருக்கும்.  இது, நபருக்கு நபர் மாறுபடும். இந்த  அட்டவணையில்,  சரி என்ற பக்கத்தில் உள்ளவற்றை நீங்கள் செய்தால், இந்த உருவமில்லாக் குரல் - உங்களைப் பாராட்டும்.  “சபாஷ் பா”.  அதே அட்டவணையில் உள்ள,  தவறு என்ற பக்கத்தில்  இருக்கும் செயல்களை, நீங்கள் செய்தால், இந்த உருவமில்லா மாயக்குரல் - உங்களை எச்சரிக்கும்.  `ஏய்’,  நீ,  ரொம்ப ஓவரா போறே”,   இது தப்பு,  இதை,  திரும்ப செய்யாதே” என்ற இந்த உருவமில்லா ஒரு மாயக்குரலே, மனசாட்சி என்று சொல்லப்படுகிறது.   



      ஏன் மனசாட்சி பற்றி யோசிக்கணும்?  என்ற கேள்வியின் பதிலாக,  மனசாட்சி – சரி,  தவறு  என,   நமது செயல்களை வகைப்படுத்தினால், தவறு என்ற அட்டவணைப் பக்கத்தில் உள்ளவற்றை, நாம் செய்யும்போது, நமக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்தி விடும்.   அக்குற்ற உணர்வு, நமக்கு,  ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தும்.  சிலர்,  தங்களின் தவறுகளால் ஏற்படும், இருதயத்தைக் கிழிக்கவல்ல, குற்ற உணர்வுகளாலேயே,  தன்னுணர்வற்ற நிலையில்,  வேதனையில் வெதும்பி, தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
  
 “மனத்துக்கண் மாசிலன் ஆதல்;  அனைத்தறன் 
 ஆகுல நீர பிற.”
  
“தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின் 
 தன்நெஞ்சே தன்னைச் சுடும். ”
          
போன்ற குறள்களில் தெளிவாக மனசாட்சி பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவர் நீதிமன்றங்களிலோ, நம்மை அறிந்த நபர்களையோ ஏமாற்றி, தப்பிவிடலாம். ஆனால், சொந்த மனசாட்சியிடமிருந்து  

தப்பமுடியாது.  மனதிற்கு மாசு இல்லை என்று தெரிந்தால் போதும், அதுவே, அனைத்திலும் சிறந்த அறம் ஆகும். மற்ற அனைத்தும் தேவையற்ற ஆபரணங்களே என்கிறார்.   மனத்தூய்மையே அறம். மனத்தூய்மை இல்லாத மற்றவை,  ஆரவாரத்தன்மை உடையவை.   
     
      மேலும், ஈடுபடும் தீச்செயல்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து, மனசாட்சியை, இதயத்தில்  சிம்மாசனமிட்டு அமரச்செய்து, நம்மை, குற்ற உணர்வோடு  எப்போதும்  களையிழந்த முகத்தோடு,  சோகம் குடிகொண்டு,  வாழச்செய்து விடும்.               
                                                                              
      நாம் பிறந்து வளர்ந்த சூழ்நிலைகள், அவரவர் கலாச்சாரங்களைப் பின்பற்றி வாழ்கின்ற நாட்டைப் பொறுத்தும், நாட்டின் சட்ட திட்டங்களின்படியும்,  மனசாட்சி - பல்வேறு விதமாக, வடிவம் பெறுகிறது. அனைவருக்கும்,  ஒரே மாதிரியான மனசாட்சி அமைந்திராது.  இந்த பேருண்மையின் புரிதல்இல்லாமல் போனதால்தான்,  போலித் தன்மைக்கு வழி வகுத்து விடுகிறது.

          வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பின்பற்றும் நடைமுறையை, தமிழ்நாட்டில் உள்ள ஒருவர்,  சுவீகரிக்க  முற்படும்போது, இது,  உத்தமக் காரியம் ஆகா, என்று,  மனசாட்சி வலியுறுத்தும்.    ஏன் என்றால், நாம் பின்பற்றும் கலாச்சாரத்தில்,  பார்த்திராத நடைமுறையை,  நாம் பின்பற்ற முற்படும்போது, அந்நிகழ்வின்மீது, மனசாட்சி அதிகாரம் செலுத்தி, அது தவறு என, எச்சரிக்கும்.

        நம்மில் பலருக்கு, பரோட்டா சாப்பிட மனசுக்குப் பிடிக்கும்,  நாமும் சாப்பிடுவோம்.   மனசுக்கு நிறைவாக இருக்கும்.   பரோட்டா  ஆரோக்கியக் குறைவான உணவு என, நமது அட்டவணையில் பதிவாகி இருப்பதால், நாம், தினமும் இரவு நேரத்தில் பரோட்டா சாப்பிட,  நம் மனசாட்சி இடமளிக்காது.  இது தவறு,   உடல்நலக் குறைபாடு ஏற்படும். என அச்சுறுத்தும்.  நற்சிந்தனை சிதறல்களால் கவலையின்றி,  துர்க்காரியம் ஆற்றுபவர்களைப் பார்த்து, உனக்கு “மனசாட்சி இல்லையா”? என்று கேட்கப்படுவதை, நாம் கேட்டிருக்கிறோம்.      


     மனசாட்சி சொல்வதை எல்லாவற்றையும் கேட்க வேண்டுமா? என்ற, கேள்வி முன்வைக்கப்படும்போது, நம் உடலுக்கு, நம் மனதிற்கு, நம் ஆரோக்கியத்திற்கான விடயங்களில்கூட, நிகழ்வுகளை மனதில் உறையவைத்து, மனசாட்சியின் குரலே ஒலிக்கும். எனவே, இதற்கான சரியான புரிதல் அவசியம். “சரி,  தவறு” என்ற அட்டவணைப் பட்டியலை, அவரவர்க்கேற்றவாறு சரி செய்து கொண்டால், உறுத்தல்கள் இன்றி வாழ்தலுக்கும், நிகழ்வுகளைப் பகுத்தறிந்து, மனித நேயமிக்கவர்களாகவும், அறம் சார்ந்து நெறிபிறழா வாழ்வியலுக்கு, நம்மை மாற்றிக்கொண்டால், மனசாட்சி எழாமலே பார்த்துக்கொள்ள இயலும்.  மேலும்,  சில சமயங்களில் மனசாட்சி எதை தவறென்கிறதோ, அதையே, அதுவே, நியாயப்படுத்தவும் செய்யும்.    

    ரயில் ஓட்டுநர்கள், மனசாட்சியின் அதீத தாக்கத்தால் இருப்பவர்களின் நிலையை யோசிப்போம். தற்கொலை செய்யப்போகும் நபர்களின் இறப்பைத்தடுக்க இயலாமல், அவர்களாலேயே மரணிப்பவர்களின் மரணங்கள், மனசாட்சியின் தாக்கத்தால், வேதனையில் வெதும்பிக்கிடப்பர்.  இதுபோன்றவர்களின் மனோபாவம், இருதயம் பலமிழந்து,  தர்ம சிந்தனைகளால் இல்லாமல்,  மனம், சுழியாகிப்போகும் நிலையில் உள்ளதாக உணர்வர்.     

       பெண்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் ஒருவர் கூறியதாவது,  “ கருவில் உள்ள போதிய மூளைவளர்ச்சி இல்லாமல்,  மனநலமில்லாமல் வளரும் சிசுவை, நவீன தொழில்நுட்பங்கொண்ட கருவியின் துணைகொண்டு கண்டறிந்து,  அதன்  தாய் தந்தை மன எண்ணத்தின்படி உருப்பெற்ற சிசுவை அழிக்க முற்படும்போது, மனசாட்சி உறுத்தல்களுடனேயே செய்கிறோம்.   இதன் தாக்கமும், உறுத்தல்களும் மனதின் ஓரத்தில்,  ஆறா வடுவாக மனம் எப்போதும் சதிராடும் என்று, தெரிவித்தார்.   
                                           
   
       கரு என்பது, ஒரு உயிர்.   அதனை, கலைத்தல் ஒரு கொலைக்கு சமம் மற்றும் மாபாவச்செயல்  என்று,  அவரின் மனசாட்சியின் அட்டவணையில் உள்ளதால்தான், அது, உறுத்தலாக மாறுகிறது.   இதுவே, அனைத்து மருத்துவருக்கும் ஏற்படுமா என்றால்?, அவர்களின் மனசாட்சிப் பதிவில், இது, அந்தப்பெற்றோரின் நலனுக்கானது இது தவறில்லை, என, பதிவாகியிருக்கும் பட்சத்தில், அது அவர்களுக்கு உறுத்தல்களை ஏற்படுத்தாது.  இதுபோன்ற சூழ்நிலையியல் நிர்ப்பந்தங்களால் செய்யப்படும் பணிகளாலும், மனசாட்சியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.  

       தூக்குத் தண்டனைக் கைதியை தூக்கிலிடும் பணியினைச் செய்யும் அந்த பணியாளரின் மனநிலை மற்றும் அவரின் மனசாட்சி என்னவாக இருக்கும்? என்று, என்றாவது நாம், ஊகித்தது உண்டா?.       
                  
        மனிதநேயமிக்கவர்களாக வாழப்பழகுதலும், அடுத்தவர் கோணத்திலிருந்தும் வாழ்வைப் பார்த்தலும், கால மாற்றங்களினாலும், சூழ்நிலைகளாலும் ஏற்படும் கலாச்சாரப் பின்பற்றுதல்களில் ஏற்படும் மாற்றங்களை, மனித நேயத்துடன் ஏற்கப் பழகுதல் நன்று.    
                                                        
    மேலும், சூழ்நிலையியலால் ஆட்படும் தவறுகள்,  தவிர்க்க இயலாததாகும் என்ற புரிதலை ஏற்படுத்துதல் நன்று. மேலும், அடுத்தவர்களுக்கு எவ்விதத்திலும் தொந்தரவு தராமல் வாழ்தலின் மீதான புரிதல் இருப்பின், மனசாட்சி, உறுத்தலை ஏற்படுத்தாமல், குற்ற உணர்வு மனதில் வியாபிக்காமலும் வாழ,  வழி வகுக்கும்.   
                                                                       
       நமது கருத்து வேறுபாடுகளாலும், மனதில் ஏற்படுத்தப்பட்ட சந்தேக ரேகைகளாலும் ஏற்படும் மோதல்களில், நாம், பிறர்மீது  பிரயோகித்த வன்சொல்கொண்ட வார்த்தைகள் கூட, மனசாட்சி எச்சரித்து, குற்ற உணர்வை ஏற்படுத்தி விடும்.  நிதானமான வாழ்வு நிலையும், மனித இனத்தின்மீது விசாலப் பார்வையும், பல தவறான வார்த்தை பிரயோகங்களைத் தவிர்க்கும்.  
     

      சக மனிதர்கள்மீது ஆளுமையைத்தவிர்த்து, அன்பை வெல்லும் ஆயுதம், உலகில் இல்லை,  என்ற புரிதலுடன்,  மற்றவர்களை மகிழ்வித்து மகிழும் மார்க்கம் காணல், மனசாட்சி உறுத்தல்களின்றி வாழ்தலுக்கு வழி வகுக்கும்.             

      வாழும்போதுதான் ஒழுக்க நெறிகள் என்பதன் பொருள் ஏதும் அட்டவணைப்படுத்தி, சட்டமாக்கி, ஏட்டில் எழுதி வைக்கப்பட்டிருக்கவில்லை..  இனத்திற்கு இனம், வாழ்வியல் இடங்கள், சூழல்கள், மதரீதியான கலாச்சாரங்கள் இவை அனைத்தைப் பொருத்தும்,  ஒழுக்க நெறிகள் அமையும்.
    
       மாறாக, மற்றவர்கள் மீது, நமது கோபக்கனலிலிருது வெளிப்படும் வன்வார்த்தைப் பிரயோகங்கள், ஏற்பட்ட அவமானங்களுக்கு பழிதீர்க்கும் நடவடிக்கைகள், அகங்காரத்தினால் தூண்டும் இழிசெயல்கள், ஆணவத்தின் உச்சமாக பழியுணர்வு ஆகிய,  மனித நேயமற்ற செயல்களால்,  சொல்லாலும், செயலாலும் செய்கின்ற நடவடிக்கைகள், மனசாட்சி வீறுகொண்டு எழலுக்கு காரணமாகிறது.   

    மனசாட்சி என்றொன்று இருப்பின், அனைவரும் நற்பண்பு உள்ளவ்ர்களாகத்தானே இருப்பர்.  அதனை விடுத்து, கொலை போன்ற மாபாவ தீச்செயல்களில்கூட எப்படி ஈடுபடுகின்றனர்? அப்படி ஈடுபடுபவர்களுக்கு,  குற்ற உணர்வு ஏற்படாதா? என்ற கேள்விக்கு, குற்ற உணர்வின்றி தீச்செயல்களில் ஈடுபடுபவர்களுள், அட்டவணையில், அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும், “சரி” என்ற பக்கத்திலேயே இடம்பெற்றிருக்கும். .  எனவேதான், அவர்களுக்கு மனசாட்சி,  குற்ற உணர்வை ஏற்படுத்தாமல், சரமாரியான தவறுகளில்  ஈடுபடக்காரணமாகிவிடுகிறது..    

      சுருங்கப்பார்க்கின், ஒருவன் தன்னுடைய மனம், உடல் ஆகியவைகளுக்கு கேடு ஏற்படுத்தாத அவன் சார்ந்த, சாராத சமுதாயத்திற்கு இழுக்கோ, கேடோ ஏற்படுத்தாமல் வாழும் வாழ்வே, அறமாகும்.       

      பிறந்த அனைவரும்,  ஒரு நாள்  மறைந்தாக வேண்டும் என்ற உயிரின் தத்துவத்தை,  புரிந்துணர்வு கொண்டு பார்த்தோமானால், வாழ்கின்ற உயிர்களுக்கு அவரவர்களின் விருப்பங்கள், ஆசைகள், சூழ்நிலை காரணிகள் போன்றவற்றால், வாழ்வியல் நிலைகளுள் மாற்றங்களை, பகுத்தறிவு கொண்டு புரிந்து, அடுத்தவரைப் பாதிக்கும் எத்தீச்செயலையும் செய்யாமலிருத்தல், மனம் எப்போதும் தர்ம சிந்தனைகளில் நிறைந்து, நமக்கு என்றென்றும் நிலையான ஆனந்தத்தை மட்டுமே அள்ளித்தரும், ஆனந்தப் பூந்தோப்பாக மாற, வழிவகுக்கும்.        
                             *********
தன்னம்பிக்கை மாத இதழில் தொடராக வெளிவந்தது

தலைப்பு: வாழ்வியல் கலை

பாகங்கள்
8) மனசாட்சி ஒரு பார்வை


        

Comments

  1. மனசாட்சியை பற்றி விரிவாக எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி