வாழ்வியல் கலை - மன அழுத்தம் உடைத்தெறிதல்

மனஅழுத்தம் உடைத்தெறிதல்

    வாழ்வில் மனதை உறைய வைக்கும் ஏமாற்றங்கள், வடுவாக்கும் பிரிவுகள், அனுக்‌ஷனமும் நினைவூட்டும் இழப்புகள், தாங்கொணாத துயரங்கள், மன்னிக்க இயலா துரோகங்கள், காரணமின்றி ஏற்பட்ட காயங்கள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளால், மனம் சோகங்களினால் ஏற்பட்டிருக்கும் தேக்கத்தினால் வெளிப்படும் பாதிப்பே, தீவிர மனஅழுத்தம் எனப்படுகிறது. தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளால் ஏற்படும் அழுத்தம், உடலிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.  இவைகள் உடலில் பல ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி, உடல் உபாதைகளை ஏற்படுத்தி விடும்.  இதனால், உடலில் நோய் எதிர்ப்புத்திறனையும்   குறைத்து விடக்கூடும். அதிக கவலைகள், தினசரி ஏற்படுகின்ற வேலைப்பளு, முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் விடயங்கள்,புறச்சூழல் போன்றவை, தற்காலிக மனஅழுத்தத்தை,  தினம் தினம் ஏற்படுத்தக் கூடும்.     
ஏற்படும் மனஅழுத்தத்தால் பதட்டம், பரபரப்பு, பயம், எதிர்மறை எண்ணங்கள், தன்னுணர்வற்ற நிலை, எதிலும் நாட்டமின்மை,தெளிவற்ற மனம், கவனமின்மை, கவனச்சிதறல் போன்ற செயல்களை ஏற்படுத்தி, மனம் இயம்பு நிலையில் இருக்க முடியாமல் செய்து விடுவதோடு, தவறான கண்ணோட்டத்தோடு வாழ்வைப் பார்த்தல், உயிர் பயம் ஏற்படுத்துதல், எப்போதும், எதையாவது யோசித்துக் கொண்டிருத்தல், பொலிவிழந்த வதனம், எதையோ மறக்க முடியாத இறுக்கமான மனம், சித்தப்பிரமை பிடித்தது போல உடல்வாகு போன்ற,  வாழ்வை நிலைகுலையச் செய்யும் உணர்வுகளோடு, வேதனையில் வெதும்பி,  வாழ்வை வாழும் நிலைக்குத் தள்ளி விடும்.     


      இது போன்ற மனஅழுத்தங்கள் சில நிமிடங்களோ, சில மணி நேரங்களோ, சில நாட்களோ, சில மாதங்களோ, சில வருடங்களோ நீடிக்கும்.  பின், மனம் இயம்பு நிலைக்குத் திரும்பும். சிலருக்கு, இயம்பு நிலைக்குத் திரும்பாமலேயேகூட, வாழ்நாள் முழுவதும் உடனிருந்து வேரறுக்கும்.
இது போன்ற மனஅழுத்தத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டால், தவறான கண்ணோட்டத்தில், வாழ்வை அணுகுதலால், வாழ்வில் மகிழ்ச்சிகளையும், முன்னேற்றங்களையும், முயற்சிகளையும் காணாமல் ஆக்கிவிடும் என்பது, நிதர்சனமான உண்மை.  

   சிறு குழந்தைகளில் தொடங்கி முதியவர்கள் வரை, எந்த வயதினருக்கும் இதுபோன்ற மனப்பதட்டநோய் தொற்றக்கூடும். இதிலிருந்து விடுபடுவதற்கான யுக்திகளைக் கையாளுதலும், உரிய மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுதலும், இந்தக் கொடுமையான மனநிலையிலிருந்து வெளிவர வழி வகுக்கும். 

    இன்றைய காலச்சூழலில், மனஅழுத்தம் ஏற்படுத்தும்   காரணிகள் ஏராளம் இருக்கின்றன. மனஅழுத்தம் ஏற்படாமலேயே இருந்து விட முடியுமா? என்றால், அது சாத்தியமில்லை. உருவான மனப்பதட்டத் திலிருந்து, எத்துணை சீக்கிரம் விடுபடக் கற்றுக் கொள்கிறோம் என்பதில்தான், நமது  சிறபுத்தியின் திறன் உள்ளது.   
     “தெளிவான நீரே அருந்த உகந்தது”. நமக்கு ஏற்பட்டுள்ளது மனஅழுத்தம் என்ற தெளிவு ஏற்படின், அதிலிருந்து, அதனை எதிர்கொள்ளக்கூடிய வழிகளைக்கண்டு, மனித மனத்தடுமாற்றத்தி லிருந்து, அவரவரை,  அவரவர் காத்தும், அதற்கான விவேக அணுகு முறையை வளர்த்துக் கொள்ளுதல் நலம் தரும்.     .

பீலிபெய் சாகாடும் அச்சிறும்; அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
   

  மனதில் அதிக பாரங்கள் ஏற்றினால், அதுவே, உடல் உபாதைகளுக்குக் காரணமாகிவிடும் என்பதை, தெளிவாக இக்குறளில், வள்ளுவப் பெருந்தகை விவரித்துள்ளார். மயிலிறகாயினும், அதிகம் ஏற்றினால், வண்டியின் அச்சு முறிவதற்கு வழி வகுத்து விடும் என்பதே, இங்கு, மன அழுத்தத்தைத் துல்லியமாக விவரித்துள்ளார்.    

  மன அழுத்தங்கள் இல்லாமல் வாழ்தல் என்பது இயலாதது.   வாழ்வில் ஓட்டங்கள், தேடல்கள், போன்றவற்றால் ஏற்படும் நிகழ்வுகளினால், மன அழுத்தம் ஏற்படக்கூடும். மேலும், இளம் பிராயத்தில் ஏற்பட்ட, மனம் ஏற்க இயலாத விடயங்களினாலோ, ஆற்ற இயலாத கடமைகளாலோ தொடர் மனஅழுத்தத்திற்கு ஆளாகி இருக்கக்கூடும்.    

  “வாய் தவறி விழும் வார்த்தைகள், கை நழுவி விழும் கண்ணாடியைவிட கூர்மையானது” உடன் வசிக்கும் மனிதர்களால் எதிர்பார்த்திராத விரும்பத்தகாத செயல்களாலும் மனதை ரணமாக்கும் வார்த்தைகளாலும்  கூட, மனஅழுத்தம் தொடர்ந்து வரக்கூடும். 

   மனஅழுத்தத்திலிருந்து விடுபட, பல அறிஞர்கள் போதனைகளை வழங்கியுள்ளனர்.  “உயிருள்ள மீன்தான் அலைக்கு எதிராக நீந்தும்”   
   யாதனின் யாதனின் நீங்கியான், நோதல் 
   அதனின் அதனின் இலன். 
  
எதில், பற்றுதல் விட்டுவிடுகின்றானோ, அதில், பற்றுதலால் வரக்கூடிய  துன்பங்களும்,  இல்லாமல் போகும் என, எதனையும், நாம் நினைப்பது போலே மட்டுமே நடைபெறவேண்டும் என்பதிலிருந்து,  நடந்து விட்ட விடயங்களை, அதன் போக்கில் விடை தேடுதல் நலம்.  ஆனால், இதனை பின்பற்றுதல் என்பதில், போராட்டங்கள் நிறைந்த  சாமானிய மனிதனின் வாழ்வில், சவால்கள் அடங்கியுள்ளது.

 
      மேலோட்ட மனஅழுத்தங்கள் உடனுக்குடன் விலகி விடவும் கூடும். அதீத மனஅழுத்தங்களின் அறிகுறிகளாக, மூலையில் முடங்குதல், இதுவா, அதுவா, என்ற குழப்ப மனநிலை, தன்னுணர்வற்ற நிலை,  ஆர்வமின்மை, முகம்பார்த்துப் பேசாமை, அதீத கோபம்,  எதிலும்  ஈடுபாடு இன்மை, தூக்கமின்மை போன்றவை அதிகமாகி, தற்கொலை போன்ற விபரீத முடிவுகளுக்கும் ஆளாகி விடக்கூடும்.   

    இதிலிருந்து விடுபட யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றாலும், மனநல மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுதலாலும், நல்ல இசையை, மெய்மறந்து கேட்டல் போன்ற வற்றால், எல்லாவற்றையும் லேசாக எடுத்துக் கொள்ளும் குணத்தை வளர்த்து, திறந்த மனதுடன், தூய்மையான சிந்தனைகளுடன் வாழ்வை அணுகுதல், நல்ல மாற்றம் தரும்.  

   இறை நம்பிக்கையுள்ளவர்கள், “எல்லாம் அவன் செயல்”  என, லேசான மனநிலைக்கு மாறுதல்,  புதிய விடியலைத் தரும்.   

   பிடித்த இடங்களுக்கு நடைப்பயிற்சியாக சென்று வருதல், நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து, அதில் ஒன்றி, வாய்விட்டுச் சிரித்து மகிழ்தல், நெருங்கிய நண்பர்களோடு உரையாடுதல், பிடித்த புத்தகத்தில் மனதைச் செலுத்துதல், விளையாட்டில் ஈடுபடுத்திக் கொள்ளுதல்,  இனிமையான இசையை ரசித்துக் கேட்டல் போன்றவை, தினசரி ஏறபடும் மனஅழுத்தங்களுக்கு,  மாமருந்தாகும்.     
    சீறிய மன அழுத்தங்கள் உள்ளவர்கள், இதை தவறான கண்ணோட்டமாகக் கருதாமல்,  மனநல மருத்துவரிடம் சென்று, பெறும்  ஆலோசனைகளைப் பின்பற்றுதல், அவர்களைச் சிறுகச்சிறுக, அதன் அதீத தாக்கத்திலிருந்து  விடுபட, வழிவகுக்கும்.  
   

     மனஅழுத்தத்துடன் வாழும் ஒருவர், அவருடன் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகிய எவருக்கும், மகிழ்ச்சி அளிக்க இயலாது. அவர்களுடன் வாழ்பவர்கள், அவர்களை விட்டு விலகி நிற்கவே, விரும்புவர். அதனால், அதிலிருந்து விடுபட வழிதேடுதல், அனைவருக்கும்  நலம் தரும்.    
மனஅழுத்தத்தை உடைத்தெறியும் திறனை, சிறுபிராயத்தில் இருந்தே குழந்தைகளுக்கு பெற்றோர், ஆசிரியர் சொல்லித் தருதலும், அவர்களே, அதன்படி வாழ்ந்து காட்டுதலும், அந்தக் குழந்தைகள் அதனைக்கற்க ஏதுவாகும். அதனை விடுத்து, குழந்தைகள் முன்பாகவே, பெற்றோர் மனஅழுத்த நோயின் பாதிப்புகளுடன், அவர்களின் வாழ்வை தொடர்ந்து வாழ்தலைப் பார்த்து வளரும் குழந்தைகள், மனஅழுத்தத்தை உடைத்தெறியும் திறனை வளர்த்துக்கொள்ள இயலாத நிலை ஏற்படும். பெற்றோர் ஒரு சிறு நிகழ்வை, விடயத்தை எவ்வாறு அணுகுகிறார்கள்? எவ்வாறு முடிவெடுக்கிறார்கள்? என்பதிலிருந்தே, குழந்தைகள் தனக்கான பாடத்தை கற்கின்றனர். எனவே, பாதிப்புக்களில் இருந்து தன்னை விடுவித்து, புத்துணர்வான வாழ்வை, பெற்றோரில் இருபாலரும் வாழ்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், அவர்கள் திடமான மனதுடன் வாழ்வை அணுகி,  காலத்தின் மீது அதிகாரம் செலுத்த ஏதுவாகும்.

    இன்றைய கால சூழ்நிலையில், சிறு குழந்தைகளைக்கூட, இந்த மனஅழுத்தம் விட்டு வைப்பது இல்லை. பாடத்தின் சுமைகள், மதிப்பெண்களின் தாக்கம், அதிக சுமையான வீட்டுப்பாடங்கள் போன்ற, அதி தீவிர வேகமுள்ள கல்வி முறையால், ஆசையாகக் கற்கவேண்டிய  கல்வியைக் கடமைக்காக கற்றலும், பயத்துடன் கற்றலும், திறமைகளை மதிப்பெண்ணால் அளவிடுதலும், விளையாட்டுகள் குழந்தைகளுக்கு
மறுக்கப்படுதலும், சிரித்து மகிழ்வதற்கான சூழல் இல்லாத கல்விப் பாடத்திட்டங்கள்  இவை அனைத்தும், சிறு குழந்தைகளுக்குக்கூட, சிந்தனைச் சிதறல்  அதிகம் ஏற்படுத்தி,  மன அழுத்தத்துக்கு ஆளாக்கி விடக்கூடும். கல்வித்திட்டத்தில், மதிப்பெண் கொண்ட அளவுகோல், கொஞ்சம் நிதானமாகக் கற்கும் திறன் உள்ள குழந்தைகளைத் தடுமாறச்செய்து, தான், வாழத்தகுதியற்றவரோ என, எண்ணத்தோன்றி, மனஅழுத்தத்தில் தள்ளி விடும். பெற்றோர், ஆசிரியர்கள் இதனைக் கண்டறிந்து, களைதல் அவசியம்.   குழந்தைகளின் திறன்களைக் கண்டு, அதனில்,அவர்களை ஊக்குவித்து, அவர்களை மனமகிழ்வுறச் செய்தலும், சூழலுக்கேற்ப வாழப்பழகுதலும், அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்தும் காரணிகளை விலக்கி வைத்தல், அவர்களை தொடர்ந்து  மகிழ்வுடன் வாழச்செய்யும். 

       தினம் ஏற்படும் மனஅழுத்தம் ஏற்படுத்தும் காரணிகளும், அதனால் ஏற்படும்  மனஅழுத்தங்களை, உடனுக்குடன் உடைத்தெறியும் கலையை, அவரவர் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடன் வசிப்பவர்கள் அவ்வாறாகப் பாதிக்கப்பட்டிருப்பினும், அவர்களின் மன அழுத்தத்தை போக்கும், யுக்திகளைப் போதித்தல், அவர்களையும் மகிழ்வுறச் செய்யும். சிறுசிறு நிகழ்வுகளால் ஏற்படும் மனஅழுத்தம், மனப்பதட்ட பாதிப்புகளில் இருந்து, சில மணி நேரங்களில்,  சில நாட்களில் வெளி வந்து விடவேண்டும். அதிதீவிர மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், 
ஆழ்மனப் பதிவுகளில் உள்ள காயங்கள், துயரங்கள், துரோகங்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட வடுக்களுக்கு மருந்தாக, மன மகிழ்வு ஏற்படக்கூடிய நிகழ்வுகளைக் கண்டறிந்து, அதில், தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல், அறிஞர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுதல், மாற்றவே முடிந்த விடயங்களை மாற்ற முயலாமல், அதனை, அதன் போக்கில், வாழ்வை அணுகுதல்  நலம் தரும். 


       மனஅழுத்தம், அனைத்து நிலையில் உள்ளவர்களையும்  தாக்கும். அதிலிருந்து எவ்வளவு விரைவில் வெளிவருகிறோம்  என்பதில்தான், நமது உள்மன திடத்தின்  திறன் வெளிப்படும்.  எதையும் எதிர்கொள்ளும் உறுதிகொண்ட நெஞ்சுரத்தை வளர்த்துக் கொள்ளுதல் அதி உத்தமம். நாம் செய்யும் பணியோ, புறச்சூழல் காரணிகளோ நம்மைப் பாதிக்காமல் ஏற்படும் பிரச்சனைகளை, அவர்களாக அணுகுதல், மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்க, வழி வகுக்கும். மனதில் அதற்கான உறுதியை, திடப்படுத்திட வேண்டும். விடயங்களை கையாளும் திறனை வளர்த்துக் கொண்டால், மனஅழுத்தம், மனப்பதற்றம்  போன்ற உணர்வுகளிலிருந்து நம்மை விடுபடச்செய்து, வாழ்வினை மகிழ்ச்சியாக வாழ,  புதிய விடியலை நோக்கி   நடைபோட இயலும்.                             
           *******************

தன்னம்பிக்கை மாத இதழில் தொடராக வெளிவந்தது

தலைப்பு: வாழ்வியல் கலை

பாகங்கள்
9)மனஅழுத்தம் உடைத்தெறிதல்


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி