நண்பர்களை தேர்ந்தெடுத்தல் நட்பு என்பது உணர்வுகளோடு தொடர்புடைய ஒரு உறவு.. இருவரிடையேயோ குழுக்களாகவோ அமையும். புரிதல், அனுசரித்தல், உதவுதல், கருத்துக்களைப் பரிமாறுதல் போன்ற இனங்களில் ஒரே மாதிரியான குணங்களுடையவர் உடனான உறவுகள் நட்பாக மலருதல் இயல்பு. இதில், பாலின மாறுபாடுகளுடன் கூட நட்புகள் அமையும். நட்பென்பது நேரடி நட்பாகவும், மறைமுக நட்பாகவும், கடித வழி நட்பு, இன்றைய முகநூல் நட்பு என பல வகைகள் உள்ளன. நட்புணர்வு என்பது பிரதிபலனை எதிர்பார்க்காமல், மனதில் தியாக எண்ணங்களையும், ஆத்மார்த்தமாக உணர்வுகளையும் காட்டும் மனக்கண்ணாடியாக அமைய வேண்டும். நட்பு நம்பிக்கையை மட்டுமே அஸ்திவாரமாகக் கொண்டு உருவாகக்கூடியது. அதனால்தான், நட்புகளில் விரிசல்கள் ஏற்படும்போது, நம்பிக்கை துரோகி என்று சொல்வதுமுண்டு. துரோகம் என்பது, நட்பின் விரிசலுக்கான இடமாக அமைந்து விடும். நண்பர்களை தேர்ந்தெடுத்து, நெருக்கத்திற்கான அளவை நிர்ணயம் செய்து பழக வேண்டியது அவசியமாகும். ...