வாழ்வியல் கலை- சுயமதிப்பை வளர்த்தல்

சுயமதிப்பை வளர்த்தல்


சுயமதிப்பு என்பது அவரவர் அவரரை விரும்புதல், ஏற்றுக்கொள்ளுதல், அங்கீகரித்தல், மதித்தல் மாற்றத்தை ஏற்றல் போன்றவற்றுடன் தொடர்புடையது. நாம் முதலில் நம்மை விரும்ப வேண்டும். இது மனம் சார்ந்த ஒன்றாகும். நமக்கான புறசூழல்களை அங்கீீகரித்து முன்னேற்றத்திற்கான வழிகளை தேடுதல் சுயமதிப்பை கூட்டும்.  சுயத்தை வெறுப்பதையும் சுயத்தை கேலிப்பொருளாக மற்றவர்கள் முன் சித்தரிப்பதும் சுயமதிப்பை வேரருக்கும். 
சுயமதிப்பை வளர்த்தலின் அவசியம் யாதெனில் நாம் நம்வாழ்வில் நம்மையும் மதித்து சக மனிதர்களையும் மதித்து நமது வாழ்வை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கான வழிதேடுதல் அவசியம். விதியை தொடர்ந்து நொந்து சொல்வதை விடுத்து, நாமே நம்மை விரும்பி, நம்மிடம் உள்ள திறமையை தேடி எடுத்தலும் உயர் லட்சியங்களை பொருத்தி அதனை அடைதலுக்கான மார்க்கங்களை காணுதலும் வாழ்வில் நிச்சயம் வெற்றி தரும். நாம் நம் மீது வைத்திக்கொள்ளும் கணிப்பே சுயமதிப்பு  ஆகும். அதாவது நம்மைப்பற்றி நாம் என்ன உணர்கிறோம் என்பது சுயமதிப்பு ஆகும்.
உயர் சுயமதிப்பு கொண்டவர்கள் எப்போது மிக்க தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் தன்னைத்தானே விரும்புபவர்களாகவும் தன்னிடம் உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல் அதனை நிறைகளாக மாற்றும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர். நாமே நம்மை விரும்பாவிடின் இந்த உலகில் யாருக்கு நம்மை பிடிக்கும் என்பதை உணர்தல் உரிய தெளிவு தரும். நம்மிடம் உள்ள உடல்ரீதியான மாற்ற முடியாத குறைகளை எப்போது பேசிப்பேசி சலிப்படைவதும் நம்மை நாமே இழிவு படுத்திக்கொள்வதும் நம் முன்னேற்றத்திற்கு நாமே போட்டுக்கொள்ளும் தடைக்கற்கள் ஆகும். உடல்ரீதியாக மாற்றமுடியக்கூடிய  குறைகளை மாற்றியும், மாற்றமுடியாத குறைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வரவழைத்து கொள்ளுதல் நலம் தரும்.
 
சுயமதிப்பற்றவர்கள் தங்களை தாங்களே தாழ்த்தி பேசிக்கொள்ளுவதும் தனக்கான குறைகளை எப்போதும் பெரிதுபடுத்துவதும் தனக்கு ஏற்படும் தடைகளுக்கான காரணத்திற்கு யாரை பொறுப்பாக்குவது என்றும், தனது சமுதாய நிலைக்கும், தன்னிறைவடையாத நிதி நிலைக்கும், தன்னுடைய பிறப்பும் சுற்றுச்சுழலும், சுற்றியுள்ளவர்களையும் தான் காரணமென்று குறை கூறிக்கொண்டே இருந்து நிதிசுதந்திரதிற்கான வழிகள் யாதென்று அறிவதற்கு முற்படமாட்டார்கள். மேலும், சிலர் சமூக தீய பழக்கங்களுக்கு ஆளாகி சமுதாயத்தை பழிப்பதையே தொழிலாக கொண்டு திரிவர். வேறு சிலர் தனது பெற்றோர்களே தனது முன்னேற்றமின்மைக்கு காரணமென புலம்பித்தீர்ப்பர். மேலும், சிலர் சூழ்நிலை 
சங்கிலிகளால் தங்களைத்தாங்களே பூட்டிக்கொண்டு, தனித்தியங்கும் திறனின்றி எப்போது அடுத்தவரை சார்ந்தே இருப்பர்.
“நீ உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்” என்ற கண்ணதாசனின்  வரிகள் சுயமதிப்பை தெளிவாக்குகிறது.
உயர் சுயமதிப்பீடு கொண்டவர்கள் எப்போது மற்றவர்களுடன் கூடுமானவரை இணக்கமான சூழலோடும் மகிழ்வான சூழ்நிலையிலும் தனக்கான பாதையில் கவனமுடன் பயணிப்பர். 
உருவம் காட்டும் கண்ணாடி முன் நிற்கும்போது சிலர் இன்னும் கொஞ்சம் உயரமாக பிறந்திருக்கலாம், இன்னும் கொஞ்சம் நிறமாக இருந்திருக்கலாம், இன்னும் கொஞ்சம் அழகாக படைக்கப்பட்டிருக்கலாம் இப்படி பல்வேறு உடல் சார்ந்த குறைகளையும் இன்னும் வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கலாம், இன்னும் உயர் நாகரீகம் கொண்டவர்கள் வீட்டில் பிறந்திருக்கலாம், இப்படி ஆயிரமாயிரம் மனம் சார்ந்த உடல் சார்ந்த சமூகம் சார்ந்த குறைகளை தலைமீது அடுக்கி அடுக்கி தலை பாரத்துடன் உலாவருவர். இது அவர்களின் சுயமதிப்பிழப்பை ஏற்படுத்தி முன்னேற்றத்தை தடுக்கும் என்பதை உணர மறுக்கின்றனர்.   
”குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா” என்ற புகழ்பெற்ற பாடலை இரு கண்பார்வை இல்லாதவர்கள் பாடுவதை பார்த்திருப்போம். இவ்வுலகை தனது கண்களை விரித்து காண இயலாதவர்களே குறையொன்றும் இல்லை என்று கூறும் போது அனைத்து நிறைவுகளுடன் பிறந்தவர்கள் எப்போதும் தன்னைதானே நொந்து கொள்வது அவர்களின் சிறப்பான எதிர்காலத்தைக் கண்கொண்டு காண தடையாக அமையும் என்பதில் தெளிவு பிறக்க வேண்டும்.  
மன ஊனம் தான் குறைபாடேயன்றி உடல் ஊனம் அல்ல. உடல் சார்ந்த குறைபாடு உள்ளவர்களில் பலர் சாதனை நாயகர்களாக வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு கால் இல்லாதவர் கூட நடனத்தில் சிறந்து விளங்குவதையும், 

ஒரு கை இல்லாதவர்கள் கூட அவர்களுக்கான பணியினை சிறப்புடன் மேற்கொள்கின்றனர். இரு கைகள் இல்லாதவர்கள் கூட கால்களால் ஓவியம் வரைவதை பார்த்திருக்கின்றோம். 3 அடி உயரமுள்ளவர்களும் தங்களுகான இடத்தை இந்த சமூகத்தில் பதிவிடுகின்றனர். இவர்கள் தான் நமது சுயமதிப்பை உச்சத்திற்கு கொண்டு செல்பவர்கள். குறைகளாக கருதப்படுபவைகளை குழியிட்டு மூடி, வாழ்வில் தன்மீதான சுய மதிப்பை உயர்த்தி தன்னைத்தானே கெளரவிப்பது நமது தன்னம்பிக்கையை வெகுவாக கூட்டும்.
நமக்குள் இருப்பதாக கருதும் உடல் சார்ந்த, மனம் சார்ந்த, சமூகம் சார்ந்தகுறைகளை அழிக்க இயலா விட்டாலும் அதனை பெரிது படுத்தாமல் சாதனை 
நாயகர்களாகவும், வெற்றியாளர்களாகவும் வலம் வர வேண்டுமெனில் நாம் நம் சுயமதிப்பை உயர்த்த வேண்டும். ”தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற் கணியன்பூங்குன்றணாரின் வரிகளை ஆழ்ந்து பார்த்தோமானால் நிதர்சன புரிதல் ஏற்படும்.  
வெளிப்புற  அழகு  என்பதில் முக்கியத்துவம் உள்ளதாக தொலைக்காட்சிகளில் காண்பிக்கும் விளம்பரங்களினால் பலர் தங்கள் சுயமதிப்பை   பாழாக்கிக்கொள்கின்றனர். அதே தொலைக்காட்சி மற்றும் வெள்ளித்திரைகளில் பலர் வெளிப்புற அழகு இல்லாமல் வென்று உலகப்புகழ் பெற்றவர்களாகவும், அதிக செல்வத்தை ஈட்டுபவர்களாகவும் இருக்கின்றனர் என்பதை நாம் அலசி ஆராய்ந்து அந்தப் பேருண்மையை மனதில் பதிய வைத்தல் சுய மதிப்பை கூட்ட உதவும்.
சுயமதிப்பு மிக்கவர்கள் தனக்கான பொருப்புகளை தீவிரமாக உணர்த்திருப்பர். பிரச்சனைகளை சவால்களாக கருதும் மனநிலை கொண்டவர்களாக இருப்பர். தைரியமும் தன்னம்பிக்கையும் இவர்களின் இரட்டை குணங்களாக இருக்கும். மேலும், மற்றவர்களின் குறைகளை பெரிதுபடுத்தி குளிர்காயும் குணமற்றவர்களாகவும் இருப்பர். 
குழந்தைப்பருவத்திலிருந்தே சுயமதிப்பை உயர்வாக வைக்க குழந்தைகளுக்கு போதிக்கப்பட வேண்டுமெனில் பெற்றோர் சுயமதிப்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும். வருடத்திற்கு வருடம் நம்மை நாமே நம்முடைய சுய மதிப்பை சோதித்து தவறுகளைக் களைய முற்படுதல் நமது வாழ்வில் உயர் லட்சியங்களை அடைய வழிவகுக்கும். 
குழந்தைகள் சிறுபிராயத்தில் இருந்தே திறமைகளை வெளிப்படுத்த பெற்றோர் முனைப்புடன் செயல்பட வேண்டும். அவர்களுக்கு என்ன திறமைகள் ஆற்றல்கள் இருக்கின்றது என்பதை கண்டுணர்ந்து அதனை பாராட்டி வரும்பட்சத்தில் அவர்களுள் சுய மதிப்பு உயர்ந்து கொண்டேவரும். 

சில பெற்றோர்கள் குழந்தைகளை படிப்பில் அதிக மதிப்பெண் எடுக்கவில்லையே என்ற எரிச்சலுணர்வில் குழந்தைகளை நொந்து கொள்வதோடு அவர்கள் வேறு திறமைகளை வெளிப்படுத்த முற்படும்போது படிக்க லாயக்கு இல்லை இதுக்கு என்ன முக்கியத்துவம் என்று அவர்களைத்திட்டி தாங்கள் திறமையற்றவர்கள், நம்மால் வெற்றியாளராக உருவாக முடியாது என அவர்களின் சுயமதிப்பு குறைய பெற்றோர்களே காரணமாகி விடுகின்றனர்.
மேலும், பெற்றோரின் இயலாமையை பிள்ளைகளின் லட்சியமாக திணித்து அவர்களின் உண்மையான ஆற்றல் வெளிப்படும் சமயம் புறக்கணிக்கப்படுகின்றனர். நாம் குழந்தைகளை சுயமதிப்பு மிக்கவர்களாக வளர்க்கவேண்டும். விஞ்ஞானி ஆல்பர்ட்
ஜன்ஸ்டின் ”உலகில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் மேதாவிகளாக பிறக்கின்றனர்” என கூறியுள்ளார். 
அனைத்து உயிர்களும் பிறக்கின்றன, இருக்கின்றன, இறக்கின்றன ஆனால் மனிதர்கள் சாதனையாளர்களாக வெற்றியாளர்களாக, தான் வாழ்கின்ற வாழ்வை சிறப்படைய செய்ய வேண்டும். 
மனிதன் சராசரி வாழ்வில் தன்னை முடக்கிக்கொள்வதும், விதி என்று நொந்து கொள்வதும், கடவுள் மீது விரக்தி ஏற்படுத்தி கொள்வதும் அவர்களின் சுயமதிப்பு குறைவாக இருப்பதே காரணமாகும். அனைவரும் அவரவர் மீதான சுயமதிப்பை உயர்வாக வளர்த்து நேர்மறை சிந்தனைகளுடன் வாழ்வை அணுகுவது,  நம்மை மற்றவர்களிடமிருந்து உயர்வாக காண்பிக்கும்.
சுயமதிப்பை உயர்வாக்கும் கலையைக் கற்றலும், கற்பித்தலும் அவசியம். எப்போதும் ஒரு குழந்தையை அதன்படிப்பை குறை கூறிக்கொண்டே இருப்பின் அக்குழந்தையின் சுயமதிப்பு சுழியாகிப்போகும் நிலைக்கு தள்ளப்படுவது நிகழ்ந்துவிடும். மேலும் அடுத்த வீட்டுக்குழந்தைகளுடன் ஒப்புநோக்கி குறை கூறப்ப்டினும் அக்குழந்தையின் சுயமதிப்பு காணாமல் செய்துவிடும் என்ற நிதர்சன புரிதல் பெற்றோருக்கு அவசியம். அணுகுமுறையில் கோளாறுகள் ஏற்படுவதும் இந்த சுயமதிப்பு குறைவாக உள்ளதே காரணமும் ஆகும்.
நம்மால் வாழ்க்கையில் ஏற்படுகின்ற எல்லா நிகழ்வுகளையும் சமாளிக்க முடியும் என்ற புரிதலில் இருந்து சுயமதிப்பு பிறக்கிறது. இவ்வுலகில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு. எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை வலிமையாகும் என்ற வாழ்வியல் தத்துவத்துடன் சுயமதிப்பை உயர்த்தி மகிழ்வித்து மகிழ்வோம். 

 

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி