வாழ்வியல் கலை- சூழலுக்கேற்ற மனமுதிர்ச்சி

சூழலுக்கேற்ற மனமுதிர்ச்சி 

மகிழ்ச்சியான வாழ்விற்கு நமது மனமுதிர்ச்சியும் (maturity to the mind) முக்கிய பங்கு வகிக்கிறது, மனம் அமைதியான நிலையில் பதட்டமின்றி எப்போதும் வைத்திருக்க முயல்வதும், எந்த செயலையும் மன அமைதியுடன் செய்ய முற்படுவதும், புரிந்து கொள்வதில் முதன்மை நிலையில் இருப்பதும், எந்த சூழ்நிலைகளையும் தனதாக்கி சிறப்பானதாக உருபெறச்செய்வதும் முழு மனமுதிர்ச்சி உடையவர்களிடம் இயல்பாக இருக்கும். எது நல்லது எது கெட்டது, எது சரி எது தவறு என அட்டவணையிட்டு வகைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் காலச்சூழலுக்கு ஏற்றவாறு மனிதனுக்கு மனிதன் மாறுபடும் செயல்பாடுகளை பகுத்தறிந்து ஏற்பதும், நிதர்சனத்தை புரிந்து கொள்வதும் முழு மனமுதிர்ச்சி கொணடர்வர்களின் குணமாகவும் அமைந்திருக்கும். 
ஒரளவிற்கான மனமுதிர்ச்சி கொண்டவர்களாக நம்மை மாற்றிக்கொள்வது நம்முடன் பிரயாணிப்பவர்களுக்கு நம்முடனான பயணம் இனிமையானதாகவும், விருப்பமுள்ளதாகவும் அமையும். மனமுதிர்ச்சி ஏன் வேண்டும் என்ற கேள்வி முன்வைக்கப்படும் போது, மற்றவர்களை திருத்துவதை பிரதானவேலையாக எடுத்து நமது பொன்னான நேரத்தை வீணடிக்காமல் சக மனிதர்களுடனான பயணத்தில் அவரவர்களுக்கென்று தனியான பாதை உள்ளதை உணர்ந்து பயணித்தால் நமது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். 
ஒரே சூழ்நிலையில் வளர்ந்தவர்களுடையே மனமுதிர்ச்சி என்பது மாறுபட்டே காணப்படுவதை பார்த்திருப்போம் ”ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி” என்ற பட்டுக்கோட்டை கல்யாண்சுந்தரம் அவர்களின் வரிகளின்படி, சிலருக்கு மனமுதிர்ச்சி அந்தந்த வயதுக்கு ஏற்ப வளர்ந்து கொண்டே வரும். சிலருக்கு வயதுக்கு ஏற்ற மனமுதிர்ச்சி இருக்காது. சிலர் மனமுதிர்ச்சி தானாகவே வளர்த்துக்கொள்ள முயன்று, அதில் வெற்றியும் கண்டிருப்பர். சிலருக்கு மனமுதிர்ச்சி என்பது என்ன என்பதைக் கூட புரிய வைக்க முடியாத அளவிற்கு இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் தாங்கள் எடுப்பது தான்  சிறந்த முடிவு என்றும், தங்களின் வாழ்க்கை முறைதான் சிறந்தது என்றும், தங்கள் மீது உள்ள மட்டுமீறிய தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பர். அடுத்தவர்களின் நிலையிலிருந்து ஒரு போதும் பார்க்கத் தெரியாதவர்களாகவும் பார்க்க விரும்பாதவர்களாகவும் இருப்பர். தங்களிடம் உள்ள குறைகளை கூட குறைகள் என்று ஒப்புக்கொள்ளாமல் மற்றவர்கள் குறைகளை பூதக்கண்ணாடி போட்டுப்பார்ப்பர். 


மனமுதிர்ச்சி என்பது நாம் முறையாக சக மனிதர்களுடன் பிரயாணிக்கும் போது பேசவும், பழகவும், நமக்கான தேவைகளை நிறைவேற்றுதலுக்கான வழிமுறைக்கே அவசியமகிறது. மனமுதிர்ச்சி கொண்டவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதை தெரிந்து கொண்டால், நம்மிடம் உள்ள முதிர்ச்சியற்ற செயல்களை நீக்கி சிறிதளவேனும் மனமுதிர்வு பெற்றவர்களாக நம்மை மாற்றிக்கொள்ள இயலும். 
முழு மனமுதிர்ச்சி கொண்டவர்கள் மற்றவர்களுடன் தங்களை எப்போதும் ஒப்பிட்டு பார்க்க விரும்பமாட்டார்கள்.  மகிழ்ச்சி என்பது வெளியே இருந்து கிடைப்பதல்ல என்பதையும், அது ஒரு தேர்ந்த மனநிலை என்பதையும் உறுதியாக நம்பும் எண்ணம் கொண்டர்வர்களாகவே இருப்பர். இவர்கள் மற்றவர்களின் தவறுகளை திருத்துவது தனது பிரதானப் பணி என எண்ணி திருத்த முயலமாட்டார்கள், மாறாக தன்னிடம் மாற்றம் தேவை என உணர்ந்தால் அதை செய்து கொள்வர். இவர்கள் சுய பரிசோதனைக்கு தன்னைத்தானே உட்படுத்தி புதுப்பித்து கொண்டே இருப்பார்கள். நடக்கும் நிகழ்வுகளை சரி தவறு என பிரிக்காமல் கால சூழ்நிலைகளுக்கும், இட சூழ்நிலைகளுக்கும், நபருக்கு நபர், இடத்திற்கு இடம் மாறுபடும், என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். உதாரணமாக யாரேனும் தபுதாரன், கைம்பெண் இருவரும் மறுமணம் செய்வாரேயினும் கூட அதனையும் விமர்சித்துக்கொண்டே பலர் கொடிப்பிடித்தாலும் இவர்கள் அந்த சூழ்நிலையை புரிந்து கொண்டு நடந்த நிகழ்வை ஏற்று, அவர்களையும் ஏற்பர். மனதை புண்படுத்தி அதில் சுகங்கான மாட்டார்கள். அவரவர்களுக்கான சூழல் வேறுபடும் என்பதை உணர்வர். குறைகள் காணப்படினும் குறைகளோடு அவர்களை ஏற்பர். யாரையும்  திருத்துவதோ சரிசெய்வதோ தனது பிறவியின் நோக்கத்திலொன்றாக கொள்ளமாட்டார்கள். மனிதர்கள் பல விதம் என்பதும் “வீட்டிற்கு வீடு வாசப்படி”  என்பது போல அனைத்து மனிதர்களிடமும் விரும்ப தகுந்த, விரும்பத்தகாத செயல்கள் இருக்கக்கூடும் என்பதையும் நிதர்சனப்புரிதலாகக் கருதுவர். 
அதே போல தனது செயல்களை நியாயப்படுத்த முற்படமாட்டார்கள். மேலும் தனதுசெயல்களை மற்றவர்கள் ஏற்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்று ஏங்கமாட்டார்கள். தனது செயல்களிலும் எண்ணங்களிலும் ஆழ்ந்த புரிதல் கொண்டவர்களாகவே இருப்பர். 

உதாரணமாக, இவர்களிடம் உள்ள தீயபண்புகள் ஏதேனும் இருப்பினும் கூட அதை மற்றவர்களிடம் நியாயபடுத்தியோ, அதை மற்றவர்களிடம் காரணம் கற்பிக்கவோ முற்படவோ மாட்டார்கள். இவர்கள் மற்றவர்களை மதித்தலுக்கும் அளவுகோளோடு இருப்பர். யாரையும் வீணாக புண்படுத்துவதோ தன்னைப்பற்றி தற்புகழ்ச்சி செய்வதோ வீண் நேர விரயம் மற்றும் தேவையற்றது என்று எண்ணம் கொண்டிருப்பர். ஒரு நாளும் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். அதே சமயத்தில் தனக்கான செயல்களில் விட்டுத்தராமலும், சுய கெளரவத்துடன் இருக்கவே விரும்புவர். இவர்களிடம் தீர்க்கமான முடிவுகளை விரைந்தெடுக்கும் திறன் இருக்கும். தேவையான நேரங்களில் தேவையான இடங்களில் இவர்களின் கருத்துக்களை அழுத்தத்துடன் முன் வைக்க தயங்கமாட்டார்கள். மேலும் எந்த விளைவுகளையும் சந்திக்கவும் தயாராக இருப்பர். 
மற்றவர்கள் கோணத்திலிருந்து அவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முயற்சிப்பர். தான் செய்வதெல்லாம் சரி என்றோ நீங்கள் செய்வது தவறு என்ற கோணத்திலும் அணுக மாட்டார்கள். மற்றவர்களிடம் தேவையற்ற எதிர்பார்ப்புகளை வைக்கமாட்டார்கள். விழிப்புடன் இருப்பதால் நம்பி ஏமாறுதல் என்பது இவர்களுக்கு அறிதானதாகும் 
தனது திறமையை மற்றவர்களின் புகழ்ச்சிக்காக பயன்படுத்தமாட்டார்கள் மாறாக வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் மட்டும் தனது திறமை மற்றும் புத்திசாலிதனத்தை வெளிப்படுத்துவார்கள். தேவையற்ற நம்பிக்கை வார்த்தைகளை உதிர்ப்பதை தவிர்ப்பர். எப்போதும் தனது செயலை மன அமைதியுடன் செய்வர். அதில் மனப்பதட்டமோ, தடுமாற்றங்களோ கொள்ளமாட்டார்கள். 
வலிகளையும் வேதனைகளையும் பொதி மூட்டைகள் போல தூக்கிச்சுமக்க மாட்டார்கள் அதனை ஆங்காங்கே வீசி எரிந்து கொண்டே முன்னோக்கி செல்வர். எதை விட வேண்டுமோ அதை விடமுயலுதலும் மற்றவர்களிடம் எதையாவது எதிர்ப்பார்பதை விடுதலும் மனமுதிர்ச்சியின் அடையாளங்களே.  
மனிதர்கள் அனைவரும் முழுமனமுதிர்ச்சியை கற்றுக்கொள்ள முடியுமா? என்றால் ”மனிதர்கள் அனைவரும் சாந்தமானவர்களாக படைக்கப்பட்டிருப்பின் ஒருவருக்கொருவர் பிரச்சனை இல்லாமல் வாழ்வார்களே என்று எதிர்ப்பார்ப்பது போல்” ஆகும். உடன் வாழும் மனிதர்களின் செயலால், நாம் 

மன பாதிப்பிற்கு உள்ளாகாமல் இருக்க நமது மன முதிர்ச்சி  உதவியாக இருக்கும், இதனால் நாம் அதை முடிந்த அளவு கற்பதும் வாழ்வில் பிரயோகிப்பதும் நலம் தரும். 
இந்த கட்டுரையின் நோக்கம் அனைவரும் மனமுதிர்ச்சி கொண்டவர்களாக மாறுங்கள் என்பதோ அனைவரும் அதனை கற்றுக்கொள்ள இயலும் என்பதோ அல்ல. நம்முடைய மனமுதிர்ச்சியின் அளவு எந்த அளவு இருக்கிறது என்பதை நாம் சுயபரிசோதனையில் உணரும் போது அதன் புரிதல் நமக்கு வரக்கூடும். எல்லா மனிதர்களும் எல்லா நேரங்களிலும் மனமுதிர்ச்சியுடன் நேர்மறை உணர்வுகளான அன்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை போன்றவற்றுடன் மட்டுமே செயல்படுவது மிகக்கடினம். மனிதனின் கோபம், சோகம், பயம், விரோதம், விரக்தி, வெறுப்பு, குற்ற உணர்வு போன்ற எதிர்மறை உணர்வுகளால் பாதிப்பிற்கு உள்ளாவது நிகழ்ந்தேரக்கூடும். இருப்பினும் எவ்வளவு குறைவான காலத்திற்குள் எதிர்மறை உணர்வுகளின் தாக்கத்திலிருந்து வெளிப்பட்டு, நேர்மறை உணர்வுகள் மனதில் வியாப்பிக்க இடம் அளிக்கின்றோம் என்பதே நமது மனமுதிர்ச்சியின் அளவீட்டில் பொருந்தும். மேலும் எதிர்மறை எண்ணங்களின் தாக்கம் வாழ்நாளில் வாழ்வைக்குலைத்துவிடாமல் அதனையே சவால்களாக்கி வெல்வதும் மனமுதிர்ச்சியின் பகுதியே.
மனமுதிர்ச்சி பற்றி படித்ததில் பிடித்தது 
“மனமுதிர்ச்சி என்பது வார்த்தைகள் பலனளிக்காத இடங்களில் புன்னகையுடன் கடந்து விடுவது”.
“மனமுதிர்ச்சி என்பது நம்மை மகிழ்ச்சி படுத்த நம்மை தவிர வேறு யாரும் வரப்போவதில்லை என்பதை அறிவது”.  
மனமுதிர்ச்சியின் பண்புகளை முழுமையாக அனைவரும் கற்றுக்கொள்ள இயலாது எனினும் இயன்றலவாவது கற்றுக்கொள்ளும் போது சகமனிதர்களோடான பயணம் இனிமை தரும். மேலும் குடும்பத்தில் தாய் தந்தை இருவரில் ஒருவர் மனமுதிர்ச்சி பெற்றிருப்பின் வளரும் குழந்தைகள் சிறு பிராயத்திலிருந்தே மனமுதிர்ச்சி கொண்டவர்களாக வளர்வர் என்பதில் ஐயமில்லை.
உயிர்கள் இவ்வுலகில் ஜனித்துவிட்டால் என்றாவது ஒருநாள் அவ்வுயிர்கள் காலமாக மாறிவிடத்தான் வேண்டும் என்ற உலக தத்துவம் புரிந்தவர்கள் நேர்மறை –

உணர்வுகளோடு வாழும் ஞானிகளாகிறார்கள். புரியாதவர்கள் எதிர்மறை உணர்வுகளுடன் உழலுகிறார்கள்.
சுருங்க சொல்லப்போனால் மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு தமது பணியை பார்ப்பது மனமுதிர்ச்சியின் அளவீடுகளில் ஒன்றே ஆகும். முழு மனமுதிர்ச்சி பின்பற்றுவது கடினம் என்ற விவாதம் முன்வைக்கப்படும் போது சிலவற்றையாவது நமது வாழ்வில் பின்பற்றினால் நமது வாழ்வு சிறப்புடன் இருக்க வழிவகுக்கும்.    வாழ்வில் அவரவர்க்கென்று தனித்தனி பக்கங்கள் உண்டென்பதை உணர்ந்து வீண்வாதங்கள் எதற்கும் உதவாது என்பதும் அவரவர்களுக்கான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்தலிலும், பிறவியின் நோக்கம் பூர்த்தி செய்தலுக்கான வெற்றிப்பாதையை காண்பது வாழ்வை வளமாக்கும் என்பதும் உணர்ந்து வாழ்தல் தெளிந்த நீரோடை போல் வாழ்வை பிரதிபலிக்கும். அனைத்தையும் புரிந்து கொள்வது தான் மனமுதிர்ச்சி என்பதல்ல சின்னச்சின்ன உணர்வுகளை புரிந்து கொள்வதே சிறந்த மனமுதிர்ச்சியாகும்.




Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி