வாழ்வியல் கலை- கனவுகளின் வலிமை

                                                  கனவுகளின் வலிமை

              “தூக்கத்தில் வருவது கனவல்ல.   நம்மை தூங்கவிடாமல் செய்வதே கனவு” என்ற,  டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழியை மையப்படுத்தியே, இந்த “கனவுகளின் வலிமை”.  நமது எதிர்கால இலட்சியங்களை சரியாகப் பொருத்தி, அதனை நோக்கிய பயணத்தில் ஏற்படும் சிக்கல்களை நீக்கி, பயணத்தைத் துரிதப்படுத்தி, அடைய வேண்டிய இடத்தினை அடைதலுக்கு உண்டான காட்சியின் வடிவமே கனவு.   
மனிதனாகப்பிறந்தவர்கள் விலங்குகள் போல, உணவிற்காக மட்டுமே வாழ்வினை வாழ்ந்துவிட முடியாது.   நமது சமூக சூழலுக்கேற்ப அவரவர்களுக்கென பொருள் தேடுதல் என்பதும், அதன் மீதான கனவுகளின் பயண தூரமும் அமையும்.   வாழ்வில்,  இலட்சியங்கள் இல்லாதவன்,  மனநலமின்றி வாழும் மனிதனாக மட்டுமே இருக்க இயலும். இலட்சியங்கள் இல்லை என்பவர்கள், அவர்களுக்குள் இருக்கும் இலட்சியங்களைத் தேடி எடுத்திட வேண்டும்.  இலட்சியங்களும்  அதன் மீதான கனவுகளும் நம்மைப்புத்துணர்வோடு வாழ்தலுக்கு வழி வகுக்கும். நமது எண்ணங்களிலும், நினைவுகளிலும், எப்போதும் நம்மை,  கனவு காண வைக்கும் விடயங்களைத் தேர்ந்தெடுத்து, அதனை அடைய முயற்சிகள் மேற்கொண்டால், நமது  வாழ்வு சிறக்கும்.   

  நமது எண்ணங்களுடனான கனவுகளில், எப்போதும் எதிர்கால வெற்றி வாய்ப்புகளை முன் நிறுத்தியே அமைதல் அவசியம்.  நேர்மறையான சிந்தனையுடன் கூடிய கனவுகள், நமக்கான இடத்தினை அடைய,  பாதைக்கு வழி வகுக்கும்.   இவ்வகைக் கனவுகள், வாழ்வில் பொருளீட்டலில் தொடங்கி, நமது பேரார்வமாக ஒளிந்திருக்கும்  திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் அமையும்.   

என்னால் முடியாது, எனக்கு வராது, எனக்குத் தெரியாது, எனக்கு நடவாது, எனக்குக் கிடைக்காது என்ற எதிர்மறை எண்ணங்களுடனான  வார்த்தைகளை  பிரயோகிப்பின், அது, நமது கனவுகளை பொடிப்பொடியாக்கிவிடும்  எதிர்மறை எண்ணங்களின் கூடாரங்களாக உள்ள சில ஊடகங்களையும், சமூக வலைதளங்களையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வினை சுவீகரித்தல், எதிர்காலத்தில்  சிறந்து விளங்க வழி வகுக்கும். 

      நண்பர்கள் என்ற போர்வையில், எதிர்மறை எண்ணம் கொண்டவர்களுடன் நாம் பயணித்தால், அது, நமது கனவுகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு சமம்.   சிலர், நமது உடல் சார்ந்த விசயங்களைக் குறை கூறிகொண்டிருப்பர்.  சிலர், நம்மைப் பேசிப்பேசி சோர்வடையச் செய்து விடுவர்.  சிலர், நம்மை மனரீதியாக பயமுறுத்துவர். சிலர், நம்மால் இது முடியாது எனச்சொல்லி, நமது எண்ண வலிமையையும், நமது இலட்சியங்களையும் -  மேகம் கலைவது போல, கலைந்தோடச் செய்து விடுவர்.   அதனால், நமது எண்ண அலை வரிசைகளுடன் ஒத்துப்போகும் நண்பர்களுடன் மட்டும் நெருங்கிப் பயணித்தலும்,   மற்றவர்களுடன்  விலகி நின்று பயணித்தலும், நமது லட்சிய வாழ்வில்,  புதிய ஆக்கத்தை உருவாக்கும்.   

கனவுகளின் வலிமைக்கான உதாரணமாக – ஒருவர்,  தான் பெரிய வீடு கட்ட வேண்டும் என்பதோ, பெரிய பாடகராக உருவாக வேண்டும் என்பதோ, விளையாட்டுகளில் புகழ்பெற வேண்டும் என்பதோ, அவரின் இலட்சியமானால், அவர் அதை நோக்கியப் பயணத்தை உடன் துவங்க வேண்டும்.  எப்போதும் அவரது கனவில், தான் விளையாட்டு வீரனாக ஆகிய பிறகான வாழ்வு, எவ்வாறு அமையும் என்பதைக் கனவில் காட்சிகளாக சித்தரிக்க வேண்டும். பெரிய வீடு கட்டி, அதில் வாழ்தலுக்கான நினைவுகளை, கனவுகளில் செதுக்கிட வேண்டும்.   இவ்வகைக் கனவுகள், நம்முடன் பயணிப்பவர்களை, எவ்விதத்திலும் பாதித்துவிடக்கூடாது.   எப்போதும் நாம் விழித்திருக்கும் வேளையில், இந்த கனவு, நமது மனக்கண்ணில் பார்த்து ரசித்தல், நமக்கான பாதை எது என்பதை, நாம் விரைவில் கண்டறிய உதவும்.   

     அதை விடுத்து, விளையாட்டு வீரனாக வேண்டும் என்ற கனவு உள்ளவர், வீட்டில் உறக்கத்திற்கு  முக்கியத்துவம்  அளித்துக் கொண்டிருந்தால், அது கனவாக, நம்  மனக்கண்ணில் விரித்து காண இயலாது.    நாம் விழித்தெழும்போது, அடுத்த வினாடியே, நமது இலட்சியக் கனவுகள் நம் கண்முன் விரிந்து காணப்படின், நாம் நமது வாழ்வில் லட்சியம்  பொருந்தி,  சரியான பாதையில் செல்கிறோம் என்று பொருள்.   அவ்வாறல்லாமல், நாம் விழித்தெழும்போது, நமது பிரச்சனைகள் நமது கண்முன் விரிந்து காணப்படின், நாம் இன்னும் அந்த பிரச்சனைகளை, சவால்களாக கருதும் மன நிலையில் தடுமாறுகிறோம்  என்றே பொருள்படும்.     

      சிலர், தனது இயலாமையை  மறைக்க,  கோபப்பட்டு கத்தித்தீர்த்து விடுவதும், முகபாவனைகளைக் கடுமையானதாக வைத்துக் கொள்வதும், எப்போதும், நம்மை வெறுப்பவர்களையே  மனதில் நிறுத்தி, அதன் நினைவுகளுடன் வாழ்வதும், வாழ்வை காரிருளில் தள்ளிவிடும்.  நம் உடன் இருப்பவர்கள் இதனால், நம்முடன்  நெருங்காமல்,  நம்மிடமிருந்து மனதளவில் விலகி நிற்பர்.  இதனால், வாழ்வில் தேவையற்ற பொய்கள்  பூக்கும் சூழல் உருவாகும்.   


     எதையும் நிதானமாகவும், அடுத்தவர் நிலையில் இருந்தும் பார்க்கும் பார்வை, அவர்களை, மற்றவர்கள் நம்முடன் சுகமாகப்பயணிக்கவும், நமது கனவுகளுக்கு அவர்களின் ஆசியும், பலமும் கிடைக்கச் செய்யும்.   எனக்கு அதிர்ஷ்டம் இல்லை, ஏதோ வாழ்கிறேன், ஏதோ இருக்கிறேன், ஏதோ பிழைப்பு ஓடுது, ஏதோ காடு வாவா என்கிறது என்ற  சிந்தனைச் சிதறல்கள் உள்ளவர்கள், ஒரு நாளும், லட்சியக்கனவுகளைக்  காண முடியாது.  அது, லட்சியங்களை நிறைவேற்றும் பணியையும் செய்யாது.   என்னால் முடியும், எனக்கு வரும், எனக்குக்கிடைக்கும் என்ற ஆழ்மன நம்பிக்கை, நமது லட்சியங்களை கனவுகளாக மாற்ற வல்லது. உருப்பெற்ற  மனக்கோட்டையில் உள்ள கனவுகள், விரைவில் முயற்சியின் துணைகொண்டு நனவாகும்.    

     விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும், பகல் கனவு பலிக்காது என்ற,  எதிர்மறை வார்த்தைகைளின் தொகுப்பு வாக்கியங்களை மண்ணில் புதையுங்கள்.   வாழ்வில் வெற்றி பெற்றவர்களைப் பற்றியும், அவர்கள் கடந்து வந்த பாதையில் எழுந்த தடைக்கற்களை, அவர்கள் எவ்வாறு உடைத்தெறிந்தார்கள் என்பது பற்றியும்,அறிவினைப் பெறுதல்,  நமது மன வலிமையை அதிகரித்து, துணிவினை உருவாக்கும்.   வாழ்வில் மூடத்தனங்கள், முட்டாள்தனங்கள், மூட நம்பிக்கைகள்  - “அது செய்தால் இதுவாகிவிடும், இது செய்தால் அதுவாகிவிடும்” என்ற வார்த்தைப் பயமுறுத்தல்கள், போன்றவற்றை யாரோ சொன்னார்கள், நான் பின்பற்றுகிறேன் என்பதை விடுத்து, அதனை இக்கால சூழலுக்கேற்பப் பகுத்தறிந்து, வாழ்வில் முன்னேற்றம் காண முயலுதல் நலம் பயக்கும்.  


      சிலர் நம்மைப்பற்றி, மற்றவர்களால் முன்வைக்கும் விமர்சனங்களையே,  தூக்கிச் சுமப்பர்.  அது அவர்களின் கருத்து.  அதனை, நாம் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து, நமது எதிர்கால வாழ்விற்கான லட்சிய கனவுகளை வடிவமைத்தலில் நமது பொன்னான நேரத்தை செலவிடுதல், வாழ்வை வளமாக்கும்.   

       பொருத்தப்படும் லட்சியங்களுக்கு ஏற்ப, நமது கனவுகள் அமையும்.  அது, நமது சிந்தனைகளாலும், எண்ணங்களாலும்  நிறைந்து,  நம்மை தூங்க விடாமல் செய்து, நாம் அடைய வேண்டிய இடத்தை அடைய, உரிய சிரத்தை எடுக்கச் செய்யும்.   அதற்குரியபடி அறிவுத்திறன்  வளர்த்தலுக்கும், கடின உழைப்பையும்  அதுவே முன் நின்று வழிவகுத்துத் தரும்.  

     ஏழ்மையில் உள்ளவர்களுக்கு, வாழ்வின் நிதித்தேவைகள், போராட்டங்கள் நிறைந்ததாகவே இருக்கும்.  வறுமை எனும் கொடிய நோயிலிருந்து வெளிவர, இளைஞர்களுக்கு உந்துதலும்,  வாழ்வைப்பற்றிய புரிதலும் அவசியம்.  இன்று சமூகத்தில் பெரிய மனிதர்களாகவும், வெற்றி வீரர்களாகவும்  தெரிபவர்களுள் பலர்,  வறுமையைக் கடந்து, வெற்றி கொண்டவர்களே.

    புறம் பேசுதல், தீய பழக்கங்களுக்கு  ஆட்படுதல்,  சோம்பல் தனம், பயந்த மனோபாவம், அகந்தை கொண்ட் மனம், ஆணவம் கொண்ட குணம்,   எதிர்மறைச் சிந்தனைகள், அவநம்பிக்கை, வஞ்சம் வளர்த்தல், பிதற்றும் குணம், பிறரின் தாக்கத்திற்கு ஆட்படும் சுபாவம், தான் என்ற அகங்காரம், வாழ்க்கை புரிதலின்மை போன்றவை, நமது லட்சிய எண்ணங்களால் ஆன கனவுக் கோட்டைகளை, அவை நிறைவேறும் முன்னரே, தகர்த்தெறியச் செய்து விடும்.  காற்றில் உதிரும் சருகுகள் திசையறியாமல் பயணிப்பது போல,  மனிதர்கள் பயணித்தல், சவத்திற்கு சமமான வாழ்வாகும்.    

         வாழ்வில் பொருத்தப்பட்ட லட்சியம் கனவுகளாகி நனவாகிவிடின், அடுத்த லட்சியம் பொருத்தப்படுதல் அதிஉத்தமம். அது, நமது வாழ்வை சுறுசுறுப் பாக்குவதோடு, வளமாக்கி  இனிமையை ஏற்படுத்தும். 


        எதுவும் இலகுவாகக் கிடைத்தால், அதன் மீதான நாட்டம் குறைவாகவே இருக்கும்.  போராடி, அவரவர் திறமையால், முயற்சியால் கிடைக்கும் வெற்றியின் சுவை அலாதியானது என்பதை, குழந்தைப் பருவத்திலேயே கற்பித்தல் அவசியம்.   பொருத்தப்படும் லட்சியங்கள் கனவுகளாக உருப்பெற்று, நமது சுவாசத்தில் வாசம் செய்ய வேண்டும்.   அப்போதுதான், அது நனவாகி,  புதிய விடியலைக் காண்பிக்கும்.   காலத்தை மாற்றியமைக்கும் சக்தி, நமது நம்பிக்கை மற்றும்  முயற்சி எனும் இரட்டை நாயகர்களுக்கு உண்டு.   

       நமது இளைஞர்கள் பலரிடம்,  லட்சியங்களின் தெளிவின்மை நிலவுகிறது.  உனக்கு என்ன எதிர்கால லட்சியம் என்று கேட்டால், நான் லட்சியம் எது என்று முடிவு செய்யல, என்ன லட்சியம் வைக்கிறது என்று தெரியல, என்ற பதில்கள்,  அந்த இளைஞர்களின் மனத்தெளிவின்மையைக் காட்டுகிறது. இது, பிரேக் இல்லாத வண்டியில் பயணிப்பதற்குச் சமமாகும். எனவே, குழந்தைகளுக்கு லட்சியங்களைப் பொருத்திடவும், அதனை,  கனவாக உருப்பெறச் செய்து, அதீத முயற்சி கொண்டு அடைதலின் வழிகளையும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் கற்பிக்க வேண்டும்.       

       நமது கனவுகள் நமது லட்சியங்களை நிறைவேற்றும் வண்ணம், நம்மால் வடிவமைக்கப்பட்டு, அதுவே, நமக்கு வழிகாட்டும் விழியாக அமையும்.  இதற்கு, எவ்வித செலவினங்களும் ஏற்படப் போவதில்லை. மனதில் வியாபித்திருக்கும்  லட்சிய எண்ணங்களைக் கோர்த்து,  நமது சிந்தனைகளைச் சேர்த்து, நமது கனவுகளை,  நமது லட்சியங்களுக்கு ஏற்ப வடிவமைக்கும் கலையைக் கற்றல் நன்று.    
                                  
      ஏதோ பிறந்தோம், வாழ்கிறோம் என்று வாழ்வினை,  அலுப்புடன் அணுகாமல், உயர் லட்சியங்களை மனதில் பொருத்தி, அதனை, மனக்கண்ணில், கனவுகளாகக் காட்சி தந்து, அக்கனவுகள் நனவாகும் மார்க்கங்களைக்கண்டு, லட்சியத்தினை அடைவது, நமது எதிர்காலம் சிறக்கச் செய்வதோடு, பெற்றோர்களுக்கும், உடன் வாழும் உறவுகளுக்கும்  பெருமை சேர்த்தல், அவர்களை ஆனந்தமடையச் செய்யும்.      
                                       
     
 *************** 

தன்னம்பிக்கை மாத இதழில் தொடராக வெளிவந்தது

தலைப்பு: வாழ்வியல் கலை

பாகங்கள்
7) கனவுகளின் வலிமை




Comments

Post a Comment

Popular posts from this blog

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி

ஈர்ப்பு விதியை பயன்படுத்துவது எப்படி